Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எந்த கட்சிக்கும் ஆதரவாக இல்லாமல் துணை ஜனாதிபதி பாரபட்சமின்றி, நியாயமாக செயல்பட வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணணுக்கு காங். வேண்டுகோள்

புதுடெல்லி: “துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் பாரபட்சமின்றி, நியாயமாக செயல்பட வேண்டும்” என காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது. காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை துணைத்தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். அதேசமயம், நாட்டின் முதல் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை துணைத்தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூறிய அறிவார்ந்த வார்த்தைகளை காங்கிரஸ் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறது.

1952 மே 16 அன்று மாநிலங்களவையின் தொடக்க நாளில் மிகவும் புகழ் பெற்ற தத்துவ ஞானி, கல்வியாளர், எழுத்தாளர், ராஜதந்திரியான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் அல்ல. அதாவது இந்த அவையில் உள்ள ஒவ்வொரு கட்சியையும் சேர்ந்தவன். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உயர்ந்த மரபுகளை நிலைநிறுத்துவதும், ஒவ்வொரு கட்சியிடமும் நியாயமாகவும், பாரபட்சமின்றியும், யாருடனும் விரோமின்றி, அனைவருக்கும் நல்லெண்ணத்துடன் செயல்படுவதும் எனது முயற்சியாக இருக்கும்.

அரசாங்கத்தின் கொள்கைகளை, எதிர்க்கட்சிகள் சுதந்திரமாகவும், நியாயமாகவும், வௌிப்படையாகவும் விமர்சிக்க அனுமதிக்கா விட்டால் ஒரு ஜனநாயக நாடு கொடுங்கோன்மையாக மாறி சீரழிந்து விடும் என்று சொன்னார். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தான் என்ன கூறினாரோ அதன்படி முழு உணர்வுடன் செயல்பட்டார்” என தெரிவித்துள்ளார்.