சென்னை: ஒரு தமிழர் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழ்நாட்டுக்கு பெருமை என பிரேமலதா தெரிவித்துள்ளார். நாட்டின் துணை ஜனாதிபதியாகவும், மாநிலங்களவை தலைவராகவும் இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல் நலக்குறைவு பிரச்னையை காரணம் காட்டி திடீரென பதவியை ராஜினாமா செய்ததால், நாட்டின் 15வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடந்தது. இதில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை விட 152 வாக்குகள் அதிகம் பெற்று நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளிடியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் ஒரு தமிழர் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெருமை. சவால்களை முறியடித்து அர்ப்பணிப்புப் பணியோடு உழைத்ததன் விளைவாகக் கிடைத்த மாபெரும் வெற்றி. உங்களுக்கு கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.