ஆளுங்கட்சி கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால் பாஜக நிறுத்தும் துணை ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு!!
டெல்லி : ஆளுங்கட்சி கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால் பாஜக நிறுத்தும் துணை ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்ற மழை கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடங்கிய 3வது நாளாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர், திடீரென திங்கள்கிழமை இரவு 9.30 மணிக்கு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேரின் பெயர்களை ஒன்றிய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் தமிழகம், பீகார் தேர்தலை மனதில் வைத்து பாஜக தேர்தல் வியூகத்தை வகுத்து பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வாக்களிக்க உள்ள மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர் பட்டியலை தயாரிக்கிறது ஆணையம். தேர்தல் அதிகாரி, உதவி அதிகாரி யார் என தீர்மானிக்கும் நடவடிக்கையில் ஆணையம் இறங்கி உள்ளது. அத்துடன், முந்தைய துணை ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பான தகவல்களை ஆராய்ந்து வருகிறது ஆணையம்.
இதனிடையே ஆளுங்கட்சி கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால் பாஜக நிறுத்தும் துணை ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மக்களவையில் 542 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 240 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர். இரு அவைகளிலும் பாஜக கூட்டணிக்கு 427 பேர் உள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு 355 பேர் உள்ளனர். மக்களவையில் பாஜக கூட்டணிக்கு 293 பேர், மாநிலங்களவையில் 134 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சி கூட்டணிக்கு மக்களவையில் 249 பேர், மாநிலங்களவையில் 106 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு 392 வாக்கு தேவைப்படும் நிலையில், பாஜக கூட்டணிக்கு 427 பேர் ஆதரவு உள்ளது.