Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தம்: எதிர்க்கட்சிகளுடன் கார்கே ஆலோசனை

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்பு கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உடல் நலப் பிரச்னையால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி தேதி வரும் 21ம் தேதி.

ஆவணங்கள் 22ம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 25ம் தேதி.  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 781 எம்பிக்கள் உள்ள நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற 391 வாக்குகள் தேவை. அதற்கான பலம் பாஜ கூட்டணிக்கு இருப்பதால் அவர்கள் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதே சமயம், எதிர்க்கட்சிகள் இப்போட்டியில் இருந்து பின்வாங்கக் கூடாது என்ற வலுவான உணர்வு இந்தியா கூட்டணியில் நிலவுகிறது.

எனவே ஆளுங்கட்சி வேட்பாளரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர். ஆனால் பொது வேட்பாளர் தொடர்பாக இதுவரை எந்த ஆலோசனையும் நடக்கவில்லை என்றாலும், வேட்பாளர் தேர்வில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த கூட்டணி கட்சி தலைவர்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தொடர்பு கொள்கிறார் என்றும் கூறப்படுகிறது.

பாஜ சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு இந்த விஷயத்தில் தீவிரம் காட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. எனவே பாஜ வேட்பாளர் யார் என்பதை பொறுத்து இந்தியா கூட்டணி சார்பில் வலுவான போட்டியாளர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* தேர்தல் ஆணையம் நோக்கி இன்று பேரணி

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்தல் ஆணையத்தை நோக்கி இன்று பேரணியாக செல்ல உள்ளன. காலை 11.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் புறப்படும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு சென்று தேர்தல் ஆணையர்களிடம் மனு கொடுக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று இரவு டெல்லி சாணக்யாபுரியில் உள்ள தனியார் ஓட்டலில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு கார்கே இரவு விருந்து அளிக்கிறார்.