டெல்லி: நாட்டின் 15ஆவது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் (67) பொறுப்பேற்றுக் கொண்டார். துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 9ம் தேதி நடந்தது. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் (67), இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டியை விட 152 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில் நாட்டின் 15ஆவது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் (67) பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார். சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு துணைத் தலைவர் பதவியை அலங்கரிக்கும் 3ஆவது தமிழர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சி தலைவர் கார்கே, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், முன்னாள் குடியரசு துணைத் தலைவர்கள் வெங்கய்யா நாயுடு, ஹமீத் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.