டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்.டி.ஏ.வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். நாடாலுமன்றத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய வழக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்தார்.
நாட்டின் 2வது மிக உயர்ந்த அரசமைப்பு பதவியான துணை ஜனாதிபதி பதவியை நீண்ட நாட்களுக்கு காலியாக வைத்திருக்கக் கூடாது என்று சட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 17வது புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது. அதன்படி கடந்த மாதம் 7ம் தேதி முதல் 21ம் தேதி வரை துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி. பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில், தெலுங்கானாவை சேர்ந்த சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி களமிறக்கப்பட்டார்.
கடந்த மாதம் அவர்கள் இருவரும் துணை ஜனாதிபதி பதவிக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். துணை ஜனாதிபதியை நாடாளுமன்ற இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். நாடாளுமன்ற மக்களவையில் ஒரு இடம் காலியாக இருப்பதால் மொத்தம் 542 எம்.பி.க்கள் உள்ளனர். நாடாளுமன்ற மேல் சபையில் 5 எம்.பி.க்கள் இடங்கள் காலியாக உள்ளதால் 228 எம்.பி.க்கள் உள்ளனர். இது தவிர மேல்சபையில் 12 நியமன எம்.பி.க்கள் உள்ளனர். மொத்தம் 782 எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர்.
இந்நிலையில் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் எப்-101 என்ற அரங்கில் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. வாக்குச்சீட்டு அடிப்படையில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 781 வாக்குகள் பதிவாகின. அதில் 767 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டன நிலையில் 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.
குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் 98.2 % வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் வெற்றிக்கு 391 வாக்குகள் தேவை என்ற நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்ஷன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றுள்ளார். துணை ஜனாதிபதி தேர்தலை பிஜு ஜனதா தளம் பி.ஆர்.எஸ்., சிரோன்மனி அகாலி தளம் ஆகியவை புறக்கணித்தன.