Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமாவுக்கு பாஜ மேலிட அழுத்தம் காரணமா..? பரபரப்பு தகவல்கள்

புதுடெல்லி: துணை ஜனாதிபதி பதவியை ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்ததற்கு பாஜ மேலிடத்தின் அழுத்தம் காரணமா என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், மாநிலங்களவை தலைவராக வழக்கமான சுறுசுறுப்புடன் செயல்பட்ட துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், இரவு 9.30 மணி அளவில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக, ஜனாதிபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பிய அவர் உடல் நல பாதிப்புகள் காரணமாக உடனடியாக பதவி விலகுவதாக கூறியிருந்தார். தன்கரின் இந்த எதிர்பாராத உடனடி பதவி விலகல் பெரும் பரபரப்பையும் பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தி உள்ளது. பாஜ மேலிடத்தின் அழுத்தம் காரணமாகத்தான் தன்கர் பதவி விலகினாரா என்பது குறித்தும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வழக்கறிஞராக இருந்து, ஆளுநராகி, துணை ஜனாதிபதி பொறுப்புக்கு உயர்ந்தவர் ஜெகதீப் தன்கர். பல விவகாரங்களில் மிக தைரியமாக பேசக் கூடியவர். விவசாய குடும்பத்தில் இருந்து வந்த அவர், ஒன்றிய பாஜ அரசின் வேளாண் விரோத போக்குக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர். விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தார். இதில் ஒன்றிய அரசை அவர் எச்சரிக்கையும் செய்துள்ளார். அதே போல, நீதித்துறை விவகாரத்தில் தன்கர் கூறிய காட்டமான சில கருத்துகள் பாஜ மேலிடத்தை அதிருப்தி அடைய வைத்தன. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதக்கள் மீது ஜனாதிபதி, ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு விதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தன்கர் கடுமையாக விமர்சித்தார். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக கருகிய நிலையில் ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்திலும் நீதித்துறையை தன்கர் கடுமையாக தாக்கினார். நீதித்துறையுடனான தன்கரின் தொடர் மோதல் போக்கை பாஜ மேலிடம் விரும்பவில்லை.

இதுபோல, பல விவகாரங்களில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தன்கர் தன்னிச்சையாக செயல்படுவதாக பாஜ அமைச்சர்களும் மேலிடத்திடம் குற்றம்சாட்டி இருந்தனர். இதனால் தன்கருக்கும் பாஜ மேலிடத்திற்குமான உறவில் ஏற்கனவே விரிசல் நிலவி வந்தது. இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை தகுதி நீக்கம் செய்ய ஒன்றிய பாஜ அரசு விரும்பியது. இதற்கு குறைந்தபட்சம் மக்களவையில் 100 எம்பிக்கள், மாநிலங்களவையில் 50 எம்பிக்களின் ஆதரவு தேவை. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே மக்களவையில் 145 எம்பிக்களும், மாநிலங்களவையில் 63 எம்பிக்களும் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை தகுதி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்தனர். இதில், அதிகப்படியான கூட்டணி கட்சி எம்பிக்களிடம் கையெழுத்து பெற பாஜ நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை விட ஆளுங்கட்சியின் பங்கு அதிகமாக இருப்பதாக காட்டுவதில் பாஜ அரசு தீர்மானமாக இருந்தது. அதுமட்டுமின்றி, மாநிலங்களவைக்கு பதிலாக ஆளுங்கட்சி எம்பிக்கள் பெரும்பான்மையாக உள்ள மக்களவை மூலமாக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற பாஜ மேலிடம் முடிவு செய்திருந்தது.

இதன் மூலம் தான் ஒதுக்கப்படுவதாக தன்கர் உணர்ந்தார். இதனால் மாநிலங்களவையில் 63 எதிர்க்கட்சி எம்பிக்களிடமிருந்து தகுதி நீக்கத்திற்கான நோட்டீஸ் பெறப்பட்டுள்ளதாகவும், இதுவே போதுமானது என்பதால் தகுதிநீக்க தீர்மானத்திற்கான குழு அமைக்க அவையின் தலைமை செயலருக்கு தன்கர் உத்தரவு பிறப்பித்தார். இது பாஜ அரசின் திட்டத்திற்கு எதிரானது என்பதால் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் தகுதிநீக்க நடவடிக்கை முற்றிலும் எதிர்க்கட்சி ஆதரவுடன் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாகி விடும் என்பதால் பாஜவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த அதிருப்தியின் காரணமாகவே, மாலையில் நடந்த அலுவல் ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் நட்டா, கிரண் ரிஜிஜூ பங்கேற்காமல் விலகி இருந்ததாக கூறப்படுகிறது. . மேலும் மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக ஒன்றிய அரசு மீது கடுமையான தாக்குதலை நடத்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை அனுமதித்த தன்கரின் முடிவையும் சில பாஜ எம்பிக்கள் விமர்சித்தனர். இதுபோல தொடர்ச்சியாக கட்சிக்கு எதிராக தன்கர் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து பாஜ மேலிடம் அவருக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த அழுத்தத்தால் துணை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகாவிட்டால் வலுக்கட்டாயமாக விலக்கப்பட வேண்டியிருக்கும் என்கிற மிரட்டலைத் தொடர்ந்து தன்கர் உடனடியாக பதவியிலிருந்து விலகியதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

தன்கரின் ராஜினாமா முடிவு குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சந்தோஷ் குமார் கூறுகையில், ‘‘மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவர் மட்டுமே உண்மையை விளக்க முடியும். உடல்நலக் காரணங்களுக்காக தன்கர் ராஜினாமா செய்யவில்லை என்பது நிச்சயம். ’’ என்றார். தன்கரின் ராஜினாமா குறித்து ஒன்றிய அரசு விளக்கம் தர வேண்டுமென ஆம் ஆத்மியும் வலியுறுத்தி உள்ளது. இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

1 மணி முதல் 4.30க்குள் நடந்த ரகசியம் என்ன?

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு மாநிலங்களவையின் அலுவல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், ஆளுங்கட்சியின் அவைத் தலைவர் ஜே.பி.நட்டா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட பெரும்பாலான எம்பிக்கள் கலந்து கொண்டனர். அலுவல் குழு கூட்டம் மீண்டும் 4.30 மணிக்கு கூட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 4.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் நட்டா, கிரண் ரிஜிஜூ வரவில்லை. அவர்களுக்காக ஜெகதீப் தன்கர் காத்திருந்தார். கூட்டத்திற்கு வராதது குறித்து தன்கரிடம் அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் எந்த தகவலும் கூறவில்லை.

இதனால் கோபமடைந்த தன்கர் செவ்வாய் கிழமை பிற்பகல் 1 மணிக்கு அலுவல் ஆலோசனை கூட்டம் நடத்துவதாக அறிவித்தார். இதில் நீதித்துறை தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக தன்கர் கூறியிருந்தார். எனவே, திங்கட்கிழமை பிற்பகல் 1 மணி முதல் 4.30 மணி வரை மிகவும் முக்கியமான ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. தன்கர் தனது ராஜினாமாவுக்கு உடல் நலக் காரணங்களை கூறியிருக்கிறார். அவை மதிக்கப்பட வேண்டும். ஆனால் அவர் ராஜினாமா செய்ததற்கு பின்னணியில் மிகவும் ஆழமான வேறு பிற காரணங்களும் உள்ளன.

2014க்கு பிந்தைய இந்தியாவை எப்போதும் பாராட்டிய தன்கர் விவசாயிகளின் நலனிலும் அதிக அக்கறை கொண்டு தைரியமாக கருத்து தெரிவித்து வந்தார். பொது வாழ்வில் அதிகரித்து வரும் அகங்காரம் குறித்தும் கருத்து தெரிவித்தார். அவையில் அவர் ஆளுங்கட்சியையும், எதிர்க்கட்சிகளையும் சமமாக நடத்தினார். முடிந்தவரை எதிர்க்கட்சிகளுக்கு இடமளிக்க விரும்பினார். விதிமுறைகள், உரிமைகள் மற்றும் நெறிமுறைகளை கடைப்பிடிப்பவராக இருந்தார். இதனால் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக நம்பினார். தன்கரின் ராஜினாமா அவரைப் பற்றி நிறைய கூறுகிற அதே நேரத்தில், அவரை துணை ஜனாதிபதி பதவிக்கு உயர்த்தியவர்களின் நோக்கங்கள் குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. தன்கர் நலம் பெற வேண்டும். அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். பிரதமர் மோடி, தன்கரின் மனதை மாற்றச் செய்வார் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது நாட்டின் நலனுக்கானது. தன்கர் தனது மனதை மாற்றிக்கொண்டால், குறிப்பாக விவசாய சமூகம் பெரிதும் நிம்மதியடைவார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நிதிஷ் குமாருக்கு வைக்கப்பட்ட குறி

பீகார் மாநில எதிர்க்கட்சியான ஆர்ஜேடி தலைமை கொறடா அக்தருல் இஸ்லாம் ஷாஹின் கூறுகையில், ‘‘பீகார் முதல்வர் நாற்காலியில் இருந்து நிதிஷ் குமாரை அகற்றி விட்டு அந்த இடத்தை கைப்பற்ற பாஜ நீண்டகாலமாக துடிக்கிறது. எனவே நிதிஷை வேட்டையாட தன்கரை பதவி விலக வைத்திருக்கிறார்கள். இது நிதிஷுக்கு வைக்கப்பட்ட குறி. அதிகாரமில்லாத பதவியை அவருக்கு கொடுத்து முதல்வர் நாற்காலியை பிடிக்க பார்க்கிறார்கள்’’ என்றார். இதை நிதிஷூக்கு நெருக்கமானவரும் மாநில அமைச்சருமான ஷ்ரவன் குமார் மறுத்துள்ளார். பீகாரில் இருந்து நிதிஷ் வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை என கூறி உள்ளார்.

ஜனாதிபதியுடன்ஹரிவன்ஸ் சந்திப்பு

துணை ஜனாதிபதி பதவி விலகியதைத் தொடர்ந்து, ஜனாதிபதி முர்மு அழைப்பின் பேரில் மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் சிங் ராஷ்டிரபதி பவனில் நேற்று ஜனாதிபதியை சந்தித்து பேசினார். மாநிலங்களவை துணை தலைவர் என்ற முறையில் புதிய துணை ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை அவருக்கான பணிகளை ஹரிவன்ஸ் சிங் கவனிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி வாழ்த்து

ஜெகதீப் தன்கர் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘ஜெகதீப் தன்கருக்கு துணை ஜனாதிபதி உட்பட பல்வேறு பதவிகள் மூலம் நாட்டிற்கு சேவை செய்ய பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அவருக்கு பூரண ஆரோக்கியம் கிடைக்க வாழ்த்துகிறேன்’’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அழுத்தத்திற்காக அடிபணியவில்லை

ஜெகதீப் தன்கரின் மைத்துனரும் வழக்கறிஞருமான பிரவீன் பால்வாடா ஜெய்ப்பூரில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவுக்கு அரசியல் அழுத்தம் போன்ற காரணங்கள் கிடையாது. அவர் எப்போதும் அழுத்தத்திற்கு ஆளானவர் கிடையாது. வேலையுடன் உடல் நலமும் முக்கியம் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். இம்முறை குடும்பத்தினர் பேச்சை மதித்திருப்பார் என நம்புகிறேன்’’ என்றார்.

ராஜினாமா ஏற்பு

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை ஜனாதிபதி முர்மு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் முறைப்படி அறிவித்தது. இதுதொடர்பாக உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் கையெழுத்திட்ட அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. மேலும், இது குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்களுக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவை நேற்று கூடியதும் அவைத்தலைவரான துணை ஜனாதிபதி இல்லாததால் அவையின் துணை தலைவர் ஹரிவன்ஷ் அவையை வழிநடத்தினார்.