Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முன்னாள் துணைவேந்தர் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்த ஆளுநர் ரவி பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை: 200 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு

சென்னை: முன்னாள் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரைத்துள்ளது. அண்ணா பல்கலை துணைவேந்தராக வேல்ராஜ் இருந்தபோது, தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.

முறைகேடு விவகாரத்தில் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதேபோல துணை வேந்தராவதற்கு முன்பாக, இயந்திரவியல் துறையின் கீழ், எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றியபோதும் வேல்ராஜ் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டபட்டார். அதன்பேரில், அவரை பணி இடை நீக்கம் செய்ய சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கு விசாரணை காரணமாக அவர் ஓய்வு பெற இருந்த 2024 ஜூலை 31ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு மற்றும் புலனாய்வு இயக்ககம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இதுமட்டுமின்றி 11 அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் போலி பேராசிரியர் விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக தெரிவித்து பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் அதிகாரிகளை அவர்கள் வகித்து வந்த கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் பதிவாளர் பிரகாஷை பதவியிலிருந்து மாற்ற பல்கலைக்கழக சிண்டிகேட் குழு அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் போலி பேராசிரியர்கள் நியமன மோசடி விவகாரத்தில் சாட்சியங்களை அழிக்கவோ, விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தவோ முடியாத வகையில் பல்கலைக்கழகத்தின் முக்கிய பதவிகளில் உள்ள 11 அதிகாரிகளை இடமாற்றம் செய்ய பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை உயர்கல்வித்துறை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் போலி பேராசிரியர்கள் நியமன விவகாரத்தில் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் தலைமையிலான 3 பேர் கொண்ட விசாரணை குழு அதன் முடிவுகளின் அறிக்கையை சிண்டிகேட்டுக்கு சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், சுமார் 200 கல்லூரிகளில் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகவும், பிணையத்தில் காணப்படாத பேராசிரியர்களை ஆசிரியராக காட்டி பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் 200க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதேபோல் முன்னாள் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவி பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து சிண்டிகேட் உறுப்பினர் மற்றும் எழும்பூர் எம்எல்ஏவுமான பரந்தாமன் கூறுகையில், ‘ஆளுநரின் உத்தரவை நாங்கள் செயல்படுத்தவில்லை. ஏனென்றால் ஆளுநருக்கு அதிகார வரம்பு இல்லை. அதன் மீது வழக்கு தொடரவும் அதிகாரம் இல்லை. இது குறித்து தான் சிண்டிகேட் கூட்டத்தில் விவாதித்தோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிண்டிகேட் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்ட நிலையில் போலியாக ஆசிரியர்கள் நியமனம் செய்தது தொடர்பாக டிவிஏசி விசாரணை நடத்த வசதியாக அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் உள்பட 11 பேர் கொண்ட அதிகாரிகளை தற்போது வகிக்கும் பதவிகளில் இருந்து விடுவித்ததையும் சிண்டிகேட் பாராட்டியுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஜூலை 31ம் தேதி நடந்த இறுதி சிண்டிகேட் கூட்டத்தில் போலி ஆசிரியர் நியமனம் தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரணை தொடர டிவிஏசிக்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.

நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை உறுதி செய்ய, முக்கிய பதவிகளில் உள்ள அதிகாரிகளை விடுவிக்க சிண்டிகேட் பரிந்துரை செய்துள்ளது என்றும் பரந்தாமன் தெரிவித்தார். இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளில் பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டாளர், மற்றும் நிறுவன இணைப்பு மையத்தின் இயக்குநர் ஆகியோர் அடங்குவர்.

துணைவேந்தருக்கான ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் நிர்வாக விஷயங்களை மேற்பார்வையிட ஒரு பதிவாளர், ஒரு பொறுப்பாளரை நியமிக்கும் பணி ஒருங்கிணைப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழு கூடுதலாக, போலி ஆசிரியர் முறைகேட்டை விசாரிக்கும் 3 உறுப்பினர்களை கொண்ட குழுவின் பரிந்துரைகளை சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்து சிண்டிக்கேட்டில் சமர்ப்பித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக போலி ஆசிரியர்கள் 200 கல்லூரிகளில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதையும் இந்த குழு கண்டுபிடித்துள்ளது.

அபராதம் விதித்தல், அந்தந்த கல்லூரிகளின் முதல்வர்களுக்கான தண்டனை அல்லது அவர்களை ஒன்றிணைத்து அந்த கல்லூரிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கவும் இந்த குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது என்றும் பரந்தாமன் தெரிவித்தார். இதையடுத்து, அனைத்து கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் சிண்டிகேட் பரிந்துரை செய்துள்ளது.