Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பராமரிப்பு இன்றி கிடக்கும் கால்நடை மருத்துவமனையை சீரமைக்க வேண்டும்

*சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பண்ருட்டி : பண்ருட்டியில் பராமரிப்பின்றி கிடக்கும் கால்நடை மருத்துவமனையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பண்ருட்டியில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகின்றனர். குறிப்பாக மாடுகள் தரும் பாலை விற்று பலர் குடும்பம் நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனை போன்று கால்நடை மருத்துவமனையும் இங்கு முக்கியமானதாக உள்ளது.

பண்ருட்டி யூனியன் அலுவலகம் அருகில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கால்நடை மருத்துவமனையின் கீழ் 20 மருந்தகங்கள் உள்ளது. பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இங்கு கால்நடைகளுக்கு ஏற்படும் ஈனியல் மற்றும் செரிமானம், கழிசல் தொடர்பான பிரச்னைகள், கால்நடைகள் கன்று ஈனும் தேதியைக் கணித்தல், கருப்பை மற்றும் கருமுட்டையின் நிலையை ஆய்வு செய்தல், சினைப்பருவ ஒருங்கிணைப்பு மற்றும் கால்நடைகளில் காலம் தவறாமல் செயற்கை கருவூட்டல் செய்தல், கோமாரி உள்ளிட்ட நோய்கள் போன்ற சிகிச்சைக்காக கால்நடைகளை விவசாயிகள் மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர்.

ஆனால் மருத்துவர்களே இல்லாத மருத்துவமனையாக இந்த மருத்துவமனை உள்ளது. இதனால் இங்கு கால்நடைகளுக்கு மருத்துவம் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் கால்நடை மருத்துவமனை வளாகமும் முறையான பராமரிப்பு இல்லாமல் முட்புதர்களால் சூழப்பட்டு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இங்கு கால்நடை பராமரிப்பு உதவியாளரும் நியமிக்கப்படவில்லை. முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் ஒருவர் மட்டும் பணியில் உள்ளார்.

எனவே கடலூர் கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து பண்ருட்டி கால்நடை பராமரிப்பு மருத்துவமனைக்கு மருத்துவர் மற்றும் கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்து கூடுதல் வசதிகள் ஏற்படுத்திதர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.