சென்னை: சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவ.19, 20ல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மழைக்கு, வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை முதல் நவ.23ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது
தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழையும், ஒரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


