சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவியை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த 2013ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்துக்கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், இருவரும் முடிவெடுக்க 6 மாதங்கள் அவகாசம் வழங்கியிருந்தது.
அவகாசம் முடிவடைந்த நிலையில், குடும்பநல நீதிமன்றத்தில் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகினர். அப்போது, நீதிபதியிடம் சைந்தவி, ஜி.வி.பிரகாஷ் தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும் பிரிந்து வாழவே விரும்புவதாக தனித் தனியாக கூண்டில் ஏறி தெரிவித்தனர். அப்போது, உங்களின் பெண் குழந்தையை யார் கவனித்துக்கொள்ள போகிறீர்கள் என்று நீதிபதி இருவரிடமும் கேட்டார். குழந்தையை சைந்தவி கவனித்து கொள்ள தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விவகாரத்து கோரிய மனு மீது வரும் 30ம் தேதி தீர்ப்பளிப்பதாக கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.