Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென் மாவட்டங்களில் வேப்பமுத்து சீசன் தொடங்கியாச்சு

*கிலோ ரூ.120க்கு வாங்கும் வியாபாரிகள்

கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டத்தில் வரக்கூடிய பருவ ஆண்டு ராபி பருவத்திற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். கோடை உழவு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதேபோல் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்த மழையால் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கோடை உழவால் பயிர்களை பாதிக்கும் களைகள் முளைக்காமல் பாதுகாக்கப்படும். இவை தவிர பயிர்களை தாக்கக்கூடிய சாரு உறிஞ்சி நோய், காய்ப்புழு, பிசின் நோய், வேர் அழுகல், படைப்புழு, தண்டு அழுகல் போன்ற பல்வேறு நோய்களில் இருந்து காக்க கோடை உழவு செய்யும் போது விதைப்பதற்கு முன் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை நிலங்களில் தூவி உழவு செய்ய வேளாண் அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர். இதனால் மண்ணில் புதையுண்டு பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் புழு மற்றும் தாவரங்கள் அழிந்து போகும்.

பயிர்களுக்கு பயன்படுத்தக்கூடிய அடி உரம் டிஏபி, மேலுரம் யூரியா, பூச்சிக் கொல்லி மருந்துகள் அனைத்திலும் வேப்ப எண்ணெய், வேப்பம்புண்ணாக்கு பயன்பாடு மிகவும் முக்கியமானதாக உள்ளது. அத்தகைய வேப்பம்புண்ணாக்கு, வேப்ப எண்ணெய் தயாரிக்க வேப்பமுத்து முக்கியமானதாகும்.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் வேப்பமுத்து சீசன் காலமாகும். தற்போது சீசன் துவங்கியுள்ளதால் கிராமப்புறங்களில் வயதான பெண்கள் முதல் படிக்கும் மாணவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் வேப்ப மரங்களில் பழுத்து பழமாகி உதிரும் வேப்பமுத்தை சேகரித்து சந்தையில் விற்று வருகின்றனர். ஒரு கிலோ வேப்பமுத்தை ரூ.120 வரை வியாபாரிகள் வாங்குகின்றனர்.

கடின உழைப்பை மேற்கொள்ள முடியாதவர்கள், வேப்பமுத்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனை நன்கு காய வைத்து ஆலைகளில் வேப்பம் புண்ணாக்கு மற்றும் எண்ணெய் பிரித்தெடுத்து பல்வேறு மருத்துவ பயன்பாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

வேப்பமுத்து பிணி தீர்க்கும் மருந்தாகவும் உள்ளது. சந்தையில் வேப்பமுத்து தற்போதைய கூடுதல் விலையால் உரங்கள். பூச்சிக் கொல்லி மருந்துகள் விலை அதிகரிக்குமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.