சென்னை: வீரமங்கை வேலுநாச்சியாரின் சிலையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார். முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் சேது.கருணாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: வீரம் என்ற வார்த்தைக்கு தமிழர் வரலாற்றில் வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் தான் எதிரொலிக்கும். சிறுவயதிலிருந்து வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.
மருது சகோதர்களின் துணையோடு நவாப் படைகளையும், ஆங்கிலேயே படைகளையும் வென்று சிவங்கை சீமையை தனியொடு பெண்ணாக வென்றெடுத்தார். வெள்ளையர்களுக்கு கப்பம் கட்ட மறுத்து அவர்களின் சூழ்ச்சியால் நாட்டையும், கனவனையும் இழந்தும் தன்னம்பிக்கை தளராமல் போராடி இழந்த மண்ணை மீட்டு இந்திய அளவில் விடுதலை போராட்டத்திற்கு வித்திட்ட முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார்தான் என்பதில் எப்போதும் தமிழ் மண் பெருமை கொள்கிறது.
இச்சிறப்புகள் வாய்ந்த வீரமங்கையின் சிலையை சென்னை காந்தி மண்டப வளாகத்தில் திறந்து வைத்து வீரமங்கை வேலுநாச்சியார்க்கும், தமிழ்மண் வீரத்திற்கும் பெருமை சேர்த்திற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முக்குலத்தோர் புலிப்படை சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.