வேலூர்: வேலூர் அருகே உள்ள பொய்கை மாட்டுச்சந்தையில் இன்று ரூ.60 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது. வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறுகிறது. இச்சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
சாதாரணமாக இங்கு ஒரு நல்ல கறவை மாடு என்பது ₹50 ஆயிரம் முதல் ₹2 லட்சத்துக்கு மேல் வரை அதன் தரத்துக்கும், கறவை திறனுக்கும் ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் காளைகள், உழவு மாடுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. சராசரியாக இங்கு விற்பனை என்பது ₹65 லட்சம் முதல் ₹1.20 கோடி வரை அப்போதைய சூழலுக்கு ஏற்ப நடைபெறும்.
கடந்த சில வாரங்களாக பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தீவன பற்றாக்குறை இருக்காது என்பதால் மாடுகள் குறைந்தளவே விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால் கடந்த ஒரு மாதமாக விற்பனை மந்த நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்றுகாலை வழக்கம்போல் பொய்கை மாட்டுச்சந்தை கூடியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் வரத்து இருந்தது. இதனால் விற்பனை ரூ.60 லட்சத்துக்கு மேல் இருந்தது என்று தெரிவித்தனர்.