வேலூர்: வேலூரை சேர்ந்த துணை ராணுவ வீரர் காலாவதி, நகைகள் திருடு போனதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த நாராயணபுரத்தை சேர்ந்த காலாவதி. இவர் காஷ்மீரில் மத்திய பாதுகாப்பு படையில் (CRPF) பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை குமாரசாமி (வயது 65). அவரது வீட்டில் தந்தை குமாரசாமி வசித்து வரும் நிலையில், கடந்த 24ம் தேதி அதிகாலை குமாரசாமி தனது விவசாய நிலத்திற்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 25 பவுன் நகைகள் மற்றும் பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து குமாரசாமி பொன்னை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ள CRPF வீரர் காலாவதி; எங்கள் வீட்டில் எங்கள் அப்பா விவசாய நிலத்திற்கு சென்ற போது யாரோ வீட்டின் பூட்டை உடைத்து எனது திருமணத்திற்காக வைத்திருந்த 25 சவரன் நகைகள், பட்டு புடவை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் தாமதமாகவே வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார்கள். ஆனால் இதுவரை நகையை கண்டுபிடித்து கொடுக்கவில்லை. எனது திருமணத்திற்காக வாங்கி வைத்த நகைகள் போய்விட்டது. புகார் அளித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டியுள்ளார். எனக்கு யாருமே உதவவில்லை என சீருடையில் அழுதபடி வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.