Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அணைக்கட்டு அருகே தொடர் கனமழையால் புலிமேடு மலையடிவார நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்

*சுற்றுலாத்தலமாக்க மக்கள் கோரிக்கை

அணைக்கட்டு : அணைக்கட்டு அருகே தொடர் கனமழையால் புலிமேடு மலையடிவார நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த புலிமேடு கிராமத்தில் உள்ள வல்லாண்டப்பன் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் மலையடிவாரத்தில் இயற்கையான நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மலைப்பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி மலை பாறை இடுக்குகள் வழியாக தண்ணீர் அதிகளவில் வந்து இந்த நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து அருவி போல் கொட்டுகிறது. கடந்த 2020ம் ஆண்டிற்கு பிறகு இந்த நீர்வீழ்ச்சியை காண மக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் கடைசி மற்றும் பருவமழை சமயத்தில் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிக அளவில் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அதிகளவில் மக்கள் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம் என்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களைச் சேர்ந்த பலர் அங்கு வந்து நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து அதில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

அணைக்கட்டு தாலுகாவில் பெரிய அளவில் சுற்றுலாத்தலங்கள் ஏதும் இல்லாத நிலை உள்ளது. எனவே இதனை சுற்றுலாத்தலமாக்கி, மக்கள் வந்து செல்வதற்கு உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து தர ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நீர்வீழ்ச்சிக்கு செல்ல தார் சாலை அமைப்பு

புலிமேடு வல்லாண்டப்பன் பெருமாள் கோயிலில் இருந்து வனப்பகுதியில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டு நீர்வீழ்ச்சிக்கு செல்வோர், அந்தப் பகுதியில் வசிக்கும் வீடுகளுக்கு செல்வோர் சிரமமின்றி சென்று வருகின்றனர்.

வனத்துறை கட்டுப்பாடு

நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. விடுமுறை தினம் என்பதால் நேற்று அதிகளவில் நீர்வீழ்ச்சியை காண மக்கள் வருவார்கள் என்பதை அறிந்த வனத்துறையினர் அங்கு வந்து கோயில் அருகே நீர்வீழ்ச்சிக்கு யாரும் செல்லாதபடி தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். ஒரு சிலர் அதை ஏற்று திரும்பி சென்று விட்டனர். ஒரு சிலர் இந்த பகுதியில் எதுவும் சுற்றுலாத்தலங்கள் இல்லாத நிலையில் இதை காண வருகிறோம்.

எங்களை அனுமதிக்க வேண்டும், உள்ளூரை சேர்ந்த எங்களைக் கூட அங்கு செல்ல அனுமதிக்க மறுப்பதா என அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஊராட்சிக்கு சொந்தமான வேறு வழியில் சென்று அந்த நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்துவிட்டு சென்றனர்.

எனவே வனத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து பொதுமக்கள் நீர்வீழ்ச்சியை பாதுகாப்புடன் பார்த்துவிட்டு செல்வதற்கு வேண்டிய உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து சுற்றுலாத்தலமாக்கிட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.