வேலூர் மாநகராட்சியில் தொடர் கதையாகிறது சாலைகளில் அவிழ்த்துவிடப்பட்டு சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள்
*நிரந்தர தீர்வு காண கோரிக்கை
வேலூர் : வேலூர் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் தொடரும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் மாநகராட்சியில் உள்ள மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிரச்னையாக உள்ளது.
வேலூர் அண்ணாசாலை, ஆரணி சாலை, நேதாஜி மார்க்கெட், பழைய பஸ்நிலையம், வேலூர் கிரீன் சர்க்கிள், சத்துவாச்சாரி, வள்ளலார், தொரப்பாடி, பாகாயம், அரியூர், காட்பாடி, விருதம்பட்டு என்று தினமும் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகிறது. இதனை தடுக்க கலெக்டர் உத்தரவின்பேரில் சாலைகளில் சுற்றும் மாடுகளை, பிடித்து காஞ்சிபுரம் கோ சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த பணிகள் ஒரு சில வாரங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இதனால் வேலூர் மாநகராட்சி முழுவதுமாக முக்கிய சாலைகளில் மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டு சாலைகளில் சுற்றிவருகிறது. திடீரென சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக மாடுகள் செல்வதால், வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.
இதனால் அவர்கள் கை, கால்கள் எலும்பு உடைந்து மருத்துவமனைக்கு பல லட்சங்கள் செலவிடும் நிலை உள்ளது. அவர்களது குடும்ப சூழ்நிலை கேள்விக்குறியாக மாறிவிடுகிறது. பல முறை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் எச்சரித்தும் சாலைகளில் மாடுகள் அவிழ்த்துவிடுவதை நிறுத்தாமல் விதிமீறலில் உச்சத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் போக்குவரத்துக்கு இடையூறாக விடப்படும் மாடுகளை காஞ்சிபுரம் கோ சாலைக்கு அனுப்பி வைப்பதுடன், மீண்டும் சம்மந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு மாடுகளை வழங்க கூடாது. இப்படி அதிரடி நடவடிக்கை எடுத்தால் தான் மாநகராட்சி சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க முடியும் என்று சமூகஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மாடுகளை ஏலம் விட வேண்டும்
வேலூர் மாநகராட்சிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அத்துடன் மாடுகளை உடனடியாக ஏலம் விட வேண்டும். அபராத தொகை பெற்றுக்கொண்டு மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதால் தான், மீண்டும் மாடுகள் சாலைகளில் அவிழ்த்துவிடப்படுகிறது. மாடுகளின் பால் மட்டும் கறந்து விற்பனை செய்யும் நபர்கள், அதனை பராமரிப்பதில்லை. இவர்களின் சுயநலத்தினால் சாலைகளில் விபத்து ஏற்பட்டு அப்பாவி மக்கள் மருத்துவமனைக்கு பல லட்சங்களை செலவு செய்து வருகின்றனர் என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
