Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

நாட்டிலேயே முதன்முறையாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் மோட்டார் நுட்பத்தில் செயற்கை வால்வு மாற்ற சிகிச்சை: மருத்துவத் துறையில் மைல்கல் சாதனை!

சென்னை: இந்திய இதய நாள சிகிச்சைத் துறை வரலாற்றில் புதியதொரு மைல்கல் சாதனையாக நாட்டிலேயே முதன்முறையாக வைட்டாஃப்ளோ லிபர்டி எனப்படும் மோட்டார் நுட்பத்திலான (Motorized) செயற்கை வால்வு மாற்ற சிகிச்சையை (TAVR - Transcatheter Aortic Valve Replacement) வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி) மருத்துவமனை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவரும் (யூனிட் II), பேராசிரியருமான டாக்டர் ஜான் ஜோஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த சாதனையை சாத்தியமாக்கியுள்ளனர். தீவிர இதய வால்வு சுருக்கத்தால் பாதிக்கப்பட்ட 82 வயது மூதாட்டி ஒருவருக்கு கடந்த ஜூலை 22-ஆம் தேதி இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

'வைட்டாஃப்ளோ லிபர்ட்டி' (Vitaflow Liberty) எனப்படுவது மைக்ரோபோர்ட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட அதி நவீன தொழில்நுட்பம். உலகிலேயே முதன்முறையாக மோட்டார் நுட்பத்தில் செயற்கை வால்வை ரத்த நாளங்கள் வழியாக இதயத்தில் பொருத்தும் நுட்பம் அது.

இதன் மூலம், செயற்கை வால்வு பொருத்தும் சிகிச்சைகள் சீராகவும், துல்லியமாகவும், மருத்துவ வல்லுநரின் முழுக் கட்டுப்பாட்டுடனும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யலாம்.

இந்த வகை தொழில்நுட்பத்தின் கீழ் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் சிகிச்சை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதய நாளத் துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின் மூலம் நோயாளியின் பாதுகாப்பும், சிகிச்சைத் தரமும் முன் எப்போதும் இல்லாத வகையில் உச்ச நிலையை எட்டியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

டாக்டர் ஜான் ஜோஸின் தலைமையிலான சி.எம்.சி. மருத்துவக் குழுவினர் இதுவரை நான்கு நோயாளிகளுக்கு 'வைட்டாஃப்ளோ லிபர்ட்டி' முறையில் செயற்கை வால்வை பொருத்தியுள்ளனர். அவர்கள் அனைவருமே மிகுந்த நலமுடன் இயல்பாக இருப்பதே இந்த சிகிச்சைக்கான சாட்சியமாக உள்ளது.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் 400-க்கும் மேற்பட்ட TAVR சிகிச்சைகளும், 10,000-க்கும் அதிகமான இதய வால்வு சீரமைப்பு சிகிச்சைகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சாதனையானது, இதய நல மருத்துவத்தில் தேசிய அளவில் முன்னோடியாகத் திகழும் சி.எம்.சி மருத்துவமனையின் பங்களிப்பை மேலும் உறுதிபடுத்துகிறது. அதுமட்டுமல்லாது, உலக அளவில் அறிமுகமாகும் அதி நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களை இந்திய மக்களிடையே கொண்டு சேர்க்கும் சி.எம்.சி. மருத்துவமனையின் பொறுப்புணர்வையும் இது வெளிக்காட்டுகிறது.

இந்த முன்முயற்சி சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட டாக்டர். ஜான் ஜோஸ் மற்றும் சி.எம்.சி குழுவினருக்கு மருத்துவமனை நிர்வாகம் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தது.