Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் பின்புறம் குப்பைகள் எரிப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிப்பு

*தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை

வேலூர் : வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தூய்மை பணியாளர்களுக்கு 3சக்கர சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ, லாரிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் சென்று குப்பைகளை சேகரித்து அதனை உரிய முறையில் தரம் பிரித்து வழங்கி மறு சுழற்சி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016-ன் கீழ், வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து அளிக்காமல் இருப்பது, தெருக்கள், கால்வாய்கள் மற்றும் காலிமனைகளில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. அதன்படி, வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, வணிக வளாகங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். தெருக்கள், கழிவுநீர்கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பையை கொட்டினால் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும்.

வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே வைத்து எரித்தால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ₹200 அபராதமாக வசூலிக்கப்படும். அதேநேரம், குப்பையை தெருக்களில் கொட்டுபவர்களை வீடியோ எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு அன்பளிப்பாக ரூ.200 அளிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால், சாலைகளில் குப்பை கொட்டுவது, பொது இடங்களில் குப்பைகளை தீ வைத்து எரிப்பது குறைந்தபாடில்லை.

ஆனால், குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை பகுதிக்கு எடுத்து செல்லாமல், ஒரு சிலர் காலியாக உள்ள இடங்களில் கொட்டி விடுகின்றனர் என்ற புகார் உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், குப்பைகளை மர்ம ஆசாமிகள் தீ வைத்த எரித்து விடுகின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் தூய்மை பணியாளர்களே தீ வைத்து எரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் பின்புறம் குப்பைகளை கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால், வசந்தபுரம், கண்டோன்மென்ட் ரயில் நிலையம் வழியாக வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் புகை மண்டலத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குப்பைகளை எரித்தால் காற்று மாசு ஏற்படும் என்பதை வலியுறுத்தி இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் குப்பைகளை எரிப்பது தொடர் கதையாகி வருகிறது. எனவே இதை தடுத்து நிறுத்தி குப்பைகளை முறைப்படி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், வேலூர் அடுத்த மேல்மொணவூர் சாலையில் சதுப்பேரி ஏரிக்கரை ஓரத்தில் குப்பைகளை ெகாட்டி தீவைத்து எரிப்பதால் வாகனஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.