Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முப்போக வெள்ளாமை... முத்தான விளைச்சல்...

சிறிய அளவில் விவசாயம் செய்பவர்கள் அவர்களது விவசாயப் பணிகளை அவர்களே செய்வார்கள். முடிந்தவரை வெளியில் இருந்து விவசாயப் பணிக்கு வேலை ஆட்களை அழைப்பதை குறைத்துக்கொள்வார்கள். ஆனால், பெரிய அளவில் விவசாயம் செய்ய வேண்டுமென்றால் கட்டாயம் வேலை ஆட்கள் தேவைப்படுவர். வேலை ஆட்கள் குறைவாக வேண்டும், அதே சமயம் அதிக இடத்தில் விவசாயம் செய்ய வேண்டுமென்றால் நெல் சாகுபடிதான் சரியான சாய்ஸ் என்கிறார் ஹரிகிருஷ்ணன். திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் குப்பத்தைச் சேர்ந்த இவர், நானோ யூரியா உரம், ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு போன்ற நவீன நடைமுறைகளை பின்பற்றியதற்காக கடந்த வருடம் பிரதமர் மோடியிடம் காணொலி மூலம் வாழ்த்து பெற்றிருக்கிறார். அதுபோக, அவரது பகுதியில் இயற்கை விவசாயம் சார்ந்த குழுவிற்கு தலைவராகவும் இருக்கிறார். கடந்த 25 வருடங்களாக நெல் சாகுபடியை தொடர்ந்து செய்துவரும் இவர், தனது விவசாயப் பணிகளை பெருமளவில் இயந்திர மயமாக்கி உள்ளார். ஒரு காலைப்பொழுதில் ஹரிகிருஷ்ணனைச் சந்தித்தோம்.

``நெல்லைத் தவிர மற்ற எந்த விவசாயம் செய்தாலும் வேலை ஆட்கள் அதிகம் தேவைப்படுவார்கள். ஆனால், நெல் சாகுபடி அப்படி அல்ல. விதைப்பில் இருந்து அறுவடை வரை அனைத்து வகையான பணிகளுக்கும் நவீன கருவிகள் வந்துவிட்டது. அதனால், பெரிய அளவில் விவசாயம் செய்ய வேண்டுமென்றால் நெல் சாகுபடி நல்ல தேர்வு. அதனால்தான் நானும் கடந்த 25 வருடங்களாக நெல் சாகுபடியை தொடர்ந்து செய்து வருகிறேன். தாத்தா, அப்பா காலத்தில் இருந்தே எங்களுக்கு விவசாயம்தான் பிரதான தொழில். நெல், கரும்பு பயிரிடுவதை அப்பா நிறுத்தியது கிடையாது. அப்பாவோடு சேர்ந்து நானும் சிறுவயதில் இருந்தே விவசாய வேலைகள் செய்து வந்தேன். நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது அப்பா இறந்துபோகவே அப்பா செய்துவந்த விவசாயத்தை நான் செய்யத் தொடங்கினேன். விவசாயம் பார்த்தபடியேதான் பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ் படித்தேன். படித்து முடித்துவிட்டு சில வருடங்கள் ஊடகம், வங்கிகளில் பணி புரிந்தேன். அங்கு வேலை பார்க்கும்போதும் கூட வேலை ஆட்கள் வைத்து விவசாயத்தை செய்து வந்தேன். ஒரு கட்டத்தில் வேலை ஆட்கள் கிடைக்காததால் நானே முழுவதுமாக விவசாயத்தில் இறங்க வேண்டிய சூழல் வந்தது. அதனால், பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு 2010ல் விவசாயத்தை முழுநேர வேலையாக செய்யத் தொடங்கினேன். சொந்த நிலம் 18 ஏக்கர், குத்தகை நிலம் 12 ஏக்கர் என மொத்தம் 30 ஏக்கரில் வருடம் முழுவதும் முப்போகமும் விவசாயம் செய்யலாம் எனத் தொடங்கி, கடந்த 15 வருடங்களாக முழுநேர விவசாயியாக இருக்கிறேன்.

இந்த 30 ஏக்கரில் நெல்லை முதன்மையாகப் பயிரிடுவேன். அதுபோக, கரும்பு, வேர்க்கடலை, காய்கறிகள் என பயிரிடுவேன். குறுகிய அளவில் பாரம்பரிய ரகங்களான கருப்புக்கவுனி, தூய மல்லி, சீரக சம்பா போன்றவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்வேன். காய்கறிகளும் குறுகிய அளவில் பயிரிடுவேன். அவற்றை எங்கள் வீட்டுத் தேவைக்கு மட்டும் பயன்படுத்துவேன். விற்பனைக்கு அனுப்பப்படும் நெல் ரகங்களான கோ 55, ஏடிடி 54, எம் டு யு 1638, பிபிடி 5204 போன்ற ரகங்கள் பயிரிடுவேன். இந்த ரகங்களை வருடம் முழுவதும் மூன்று போகமுமே பயிரிடுகிறேன். கடந்த சீசனில் 30 ஏக்கரில் கோ-55 பயிரிட்டேன். 110 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிற இந்த சன்ன ரகம் அதிக விளைச்சலுக்கு உகந்த ரகம். அதனால், பெரும்பாலும் இந்த ரகத்தை அதிகளவு பயன்படுத்துவேன். சராசரியாக இந்த ரகத்தில் 30 இருந்து 35 மூட்டை நெல் கிடைக்கும். கடந்த சீசனில் பருவநிலை மாற்றத்தால் மழை அதிகம் பெய்தது. அதனால், ஏக்கருக்கு 78 கிலோ அளவிலான 30 மூட்டை நெல் மட்டுமே கிடைத்தது. இந்த நெல் அனைத்தையுமே திருவள்ளூர் மாவட்ட நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்தேன். அங்கு 40 கிலோ நெல் மூட்டையை ரூ.970க்கு வாங்குகிறார்கள். அந்த வகையில், ஒரு ஏக்கரில் கிடைத்த 2340 கிலோவை, ரூ.57 ஆயிரத்திற்கு விற்பனை செய்தேன்.

விதைநெல், விதைப்பு, களை பறித்தல், உரம், பூச்சி மருந்து, அறுவடை என ஒரு ஏக்கருக்கு சராசரியாக 30 ஆயிரம் வரை செலவு ஆகும். அதேபோல, நெல் கொள்முதல் நிலையத்திற்கு நான் நெல்லை விற்பனை செய்தால், அங்கு நெல் மூட்டைகளை அனுப்ப ஆகும் செலவும் நாம்தான் செய்ய வேண்டும். அந்த வகையில் ஒரு ஏக்கருக்குஎனக்கு 35 ஆயிரம் செலவு ஆனது. 35 ஆயிரம் செலவு செய்து 57 ஆயிரத்திற்கு விற்பனை செய்ததால், ஏக்கருக்கு 22 ஆயிரம் லாபமாக கிடைக்கும். அந்த வகையில் 30 ஏக்கருக்கு 6 லட்சத்து 60 ஆயிரம் லாபமாக கிடைக்கும். இதில், குத்தகைக்கு ஆகும் செலவும் இருக்கிறது. விதைப்பில் இருந்து அறுவடை வரை அனைத்திலுமே நவீனக் கருவிகளை பயன்படுத்தி வருவதால் சில சமயம் கூடுதல் செலவும் ஆகும். பருவ நிலை மாற்றத்தைப் பொருத்து விளைச்சலும் நெல்லின் விலையும் குறையும் வாய்ப்பும் உள்ளது. இருந்தபோதும், மூன்று போகமும் நெல் சாகுபடியை விடாமல் செய்து வருகிறேன்’’ என மகிழ்ச்சி பொங்க பேசி முடித்தார் ஹரி கிருஷ்ணன்.

தொடர்புக்கு:

ஹரி கிருஷ்ணன்: 97909 49791

வருடம் முழுவதும் நெல் சாகுபடியை தொடர்ந்து செய்துவரும் ஹரிகிருஷ்ணன், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நெல் விதைக்காமல், நிலத்தை காய விடுகிறார். அந்த சமயம், நிலத்தில் தக்கைப்பூண்டு, சணப்பை போன்றவற்றை விதைத்து நிலத்திலேயே மடக்கி உழுகிறார். இதன்மூலம், நெல் சாகுபடிக்குத் தேவையான தழைச்சத்து நிலத்திற்கு கிடைக்கும் என்கிறார்.

இயற்கை விவசாய சங்கத்தின் தலைவராக இருக்கும் ஹரிகிருஷ்ணன், அந்த சங்கத்தின் மூலம், இயற்கை இடுபொருட்களான மீன் அமிலம், பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் போன் றவற்றை தயாரித்து அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிறார். இதுபோக, இயற்கை விவசாயத்தை கேவிகே மூலம் பயிற்சி எடுத்து, மற்ற விவசாயிகளுக்கும் பயிற்சி கொடுக்கிறார்.

செயற்கை மற்றும் இயற்கை என இரண்டு முறையிலும் விவசாயம் செய்துவரும் ஹரி, இயற்கை முறை விவசாயம் செய்ய அரசு நல்ல மானியம் கொடுத்து உதவினால், நான் உட்பட நிறைய விவசாயிகள் இயற்கை முறை விவசாயத்திற்கு முழுமையாக திரும்பி விடுவோம் என அரசிடம் கோரிக்கையும் வைக்கிறார்.