நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த வசாய் கிறிஸ்தவ மீனவர்களால் கொண்டாடப்படும் உத்திரிய மாதா ஆண்டு திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினம்தோறும் சிறப்பு திருப்பலி நடந்து வந்தது. முக்கிய திருவிழாவான தேர்பவனி நேற்றிரவு நடந்தது. வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமை வகித்தார். பேராலயத்தில் இருந்து புனித உத்திரிய மாதா தேர்பவனியை பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் புனிதம் செய்து வைத்தார்.
பின்னர் தனிதனி சப்பரங்களில் உத்திரிய மாதா, செபஸ்தியார், அந்தோணியார் வலம் வந்தனர். வேளாங்கண்ணி கடற்கரை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடந்தது. அப்ேபாது இருபுறமும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் திரண்டு பிரார்த்தனையை நிறைவேற்றினர். நள்ளிரவு, தேர்பவனி நிலையை அடைந்தது. வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று காலை கொங்கனி மொழியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.