Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்: செப். 7ம் தேதி தேர்பவனி

நாகை: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நாளை மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கானோர் குவிந்த வண்ணம் உள்ளனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்துக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இது கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான விழா நாளை (29ம் தேதி) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

செப்டம்பர் 7ம் தேதி பெரிய தேர்பவனி, 8ம் தேதி ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா நடக்கிறது. விழா காலங்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் வந்து செல்வதற்கு வசதியாக பல்வேறு மண்டலங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குடந்தை கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெருவிழாவுக்காக வர்ணம் பூசப்பட்டு மின் விளக்கு அலங்காரத்தில் பேராலயம் ஜொலிக்கிறது. வேளாங்கண்ணி பேரூராட்சி சார்பில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் குவிவதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொடியேற்றத்தையொட்டி இன்று (28ம் தேதி), நாளை (29ம் தேதி) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி செல்வக்குமார் தெரிவித்துள்ளார். கொடியேற்றத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து பஸ்கள், ரயில்கள், வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் லட்சக்கணக்கானோர் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் வேளாங்கண்ணி விழாக்கோலம் பூண்டுள்ளது.

கடலில் குளிக்க 10 நாள் தடை

வேளாங்கண்ணியில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கையாக வேளாங்கண்ணி கடலில் குளிக்க நாளை முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருட்டுகளை தடுக்க காவல்துறை சார்பில் பேராலய வளாகத்தில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.