Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

17 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டம் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தை முடக்கியுள்ள ஒன்றிய அரசு: இந்த ஆண்டாவது மக்கள் பயன்பாட்டிற்கு வருமா?

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் ரயில் போக்குவரத்து சேவையை அதிகரிக்கவும் பறக்கும் ரயில் அமைக்கும் திட்டம் 1985ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 3 கட்டங்களாக இத்திட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக 1997ம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.266 கோடியில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. 2ம் கட்டமாக ரூ.877.59 கோடியில் மயிலாப்பூர் முதல் வேளச்சேரி வரை தொடங்கப்பட்டு கடந்த 2007ம் ஆண்டு முடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 3ம் கட்டமாக 2008ம் ஆண்டு ரூ.495 கோடியில் வேளச்சேரி முதல் பரங்கிமலை இடையே பணிகள் தொடங்கியது. மொத்தம் 5 கிலோ மீட்டர் தூரத்தில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் ரூ.495 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் தற்போது ரூ.734 கோடிக்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனால் ஆதம்பாக்கம் பரங்கிமலை இடையே எஞ்சியுள்ள அரை கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் மட்டும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.

திட்டமிட்டப்படி பணிகள் 2010ல் முடியாததால் இதற்கான திட்ட மதிப்பீடு உயர்ந்தது. அதனை தொடர்ந்து நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு முன்னதாகவே புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. ஆனால் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.30 கோடி செலவிடப்பட்டது. இந்த ரயில் பாதையானது கடற்கரை முதல் தாம்பரம் புறநகர் மின்சார ரயில் பாதையின் மேல் அமைகிறது.

இத் திட்டத்தில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்க தயாராக உள்ளன. இதில் 4.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 167 தூண்களுடன் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் வரிசையாக பிரம்மாண்டமான தூண்கள் அமைத்து, மேம்பாலம் இணைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியின் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு ஏற்கனவே 250 மீட்டர் தூரத்திற்கு 28 தாங்கும் பாலங்கள் அமைக்கப்பட்ட நிலையில் மொத்தம் 36 தாங்கும் பாலங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

அங்கு அமைக்கப்பட்ட தூண்கள் மீது அமைக்கப்பட்ட ரயில் பாலம் திடீரென சரிந்து பாரம் தாங்காமல் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் 17 ஆண்டுகள் கடந்தும் முடிவு நிலையை எட்டப்படவில்லை. மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கடந்தாண்டு அதிகாரிகள் கூறினர். ஆனாலும் அது வழக்கம்போல நடைபெறவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சோழிங்கநல்லூர் வரையிலான பாதையில் மெட்ரோ ரயில் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது.

அந்த பணிகள் முடிந்து வரும் 2027ம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அப்போதும் கூட பறக்கும் ரயில் பாதை பணிகள் முடியுமா என்று தெரியவில்லை. மேலும் தமிழகத்தில் பாஜக நாங்களும் இருக்கிறோம் என்று இருப்பை காட்டிக் கொள்ளும் வகையில் தமிழக அரசுக்கு எதிராக காரணமே இல்லாமல் தினமும் ஒரு போராட்டத்தை அறிவிக்கின்றனர். ஆனால் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில்ேவ திட்டம் ஆரம்பித்து 17 ஆண்டுகள் ஆகியும் என்ன காரணத்திற்காக இந்த திட்டத்தை முடிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் என ஆராய்ந்து அந்த திட்டத்தை விரைந்து முடித்து தமிழக பாஜ சார்பில் ஒன்றிய அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்துவார்களா? என ரயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

* அரை கிலோமீட்டர் தூரத்திற்கு ஆமை வேகத்தில் பணிகள்...

ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மாதத்தை குறிப்பிட்டு இந்த திட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று ரயில்வே நிர்வாகம் கூறுகின்றது. ஆனால் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியின் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இடையேயான மேம்பாலம் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது என்பதுதான் நிதர்சனம். இதனால் இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட கூடுதல் நிதி செலவிட வேண்டியுள்ளது. அப்பகுதி மக்கள் கேட்கப்பட்ட இழப்பீட்டு தொகையை விட தற்போது அந்த திட்டத்திற்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதை அந்த திட்டம் என்ன காரணத்திற்காக முடிக்க முடியாமல் இருக்கிறது என்று ரயில்வே நிர்வாகம் ஆராய்ந்து திட்டத்தை முடித்தால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஒரளவுக்கு குறைய வாய்ப்புள்ளது என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

* 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் 17 ஆண்டுகள் கடந்தும் முடிவு நிலையை எட்டப்படவில்லை.

* அந்த பணிகள் முடிந்து வரும் 2027ம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அப்போதும் கூட பறக்கும் ரயில் பாதை பணிகள் முடியுமா என்று தெரியவில்லை.

* மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கடந்தாண்டு அதிகாரிகள் கூறினர். ஆனாலும் அது வழக்கம்போல நடைபெறவில்லை.

* அதே பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சோழிங்கநல்லூர் வரையிலான பாதையில் மெட்ரோ ரயில் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது.