வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற விஜய் டிரைவர் மீது வழக்கு: நீதிமன்ற உத்தரவு படி பிரசார பஸ்சை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை
கரூர்: கரூர் மற்றும் நாமக்கலில் பிரசாரம் செய்வதற்காக கடந்த 27ம் தேதி திருச்சியில் இருந்து கார் மூலம் வந்த விஜய் பின்னர் நாமக்கல் நோக்கி தனது சொகுசு பிரசார பஸ்சில் சென்றார். அப்போது, விஜய்யின் பிரச்சார வாகனத்தை சுற்றிலும், முன்னும், பின்னும் என அவரது ரசிகர்களும் தொண்டர்களும் பைக்குகளிலும் கார்களிலும் பின்தொடர்ந்தனர். நெடுஞ்சாலையில் மற்ற வாகனங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர் திசையிலும் தொண்டர்களும் ரசிகர்களும் சென்றனர்.
அப்போது இரண்டு பைக்குகள் விஜய் பிரசார பஸ்சின் பக்கவாட்டில் வந்து செல்போனில் செல்பி எடுக்க முயலும்போது, பஸ் மீது மோதி கீழே விழும் வீடியோ காட்சிகள் வௌியாகின. ஆனால் விஜய்யின் பிரசார பஸ் நிற்காமல் சென்றது. அதன் பிறகு கரூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பாக வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விபத்து தொடர்பாக தனியாக வழக்குப்பதிவு செய்து, பிரசார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பியது. இதையடுத்து கரூர் தவிட்டுப்பாளையம் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த ஏட்டு தெய்வ பிரபு என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விஜய் பிரசார பஸ் டிரைவர் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இரண்டு பைக்குகளில் அதிவேகமாக வந்தவர்கள் மோதியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும், மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்தும் விதமாகவும் வாகனங்களை ஓட்டியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு பிஎன்எஸ் 281 சட்டப்பிரிவில் 3பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டப்பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் சிறைதண்டனையும், 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விஜய்யின் பிரசார பஸ்சை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளையும் வேலாயுதம்பாளையம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இன்று அல்லது நாளைக்குள் பிரசார பஸ் பறிமுதல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.