Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘போலீஸ் ஸ்டிக்கர்’ ஒட்டிய போலீஸ் வாகனங்களுக்கும் ரூ.500 அபராதம் விதிப்பு: வேப்பேரி போக்குவரத்து போலீஸ் அதிரடி

சென்னை: சென்னை பெருநகர காவல்துறை அலுவலக பார்க்கிங்கில் ‘போலீஸ் ஸ்டிக்கர்’ ஓட்டிய வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் தலா ரூ.500 அபராதம் விதித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மோட்டார் வாகன சட்டப்படி வாகனப் பதிவு எண் பலகைகளில் ஸ்டிக்கர்கள் ஓட்டி இருந்தால் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

தேவையற்ற ஸ்டிக்கர்களை ஒட்டி இருந்தால், அதை மே 1ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் மே 2ம் தேதி முதல் வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மே 1-ம் தேதி கால அவகாசம் முடிந்ததால், மே 2ம் தேதி முதல் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் எல்லையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

அந்த வகையில் வேப்பேரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டிவேல் தலைமையிலான போக்குவரத்து போலீசார் நேற்று வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக வளாக பார்க்கிங்களில் நிறுத்தப்பட்டிருந்த காவலர்களின் வாகனங்களை திடீரென சோதனை செய்தனர். அப்போது ‘போலீஸ்’ என்ற வாசகம் ஒட்டப்பட்ட வாகனங்களை அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட வாகனங்களின் மீது வழக்குப் பதிவு செய்து அபராதமாக ரூ.500 வசூலித்தனர்.