கிருஷ்ணகிரி அருகே ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால், நேற்று மாலை 4.30 மணியளவில், குருபரப்பள்ளி பஸ் நிறுத்தம், போலீஸ் நிலையம் அருகில் வாகனங்கள் மெதுவாக சென்று கொண்டிருந்தன. அப்போது, மைதா மாவு மூட்டைகள் ஏற்றிய லாரி கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற 2 கார்கள், டூவீலர்கள் மற்றும் கன்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் கன்டெய்னர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது.
அத்துடன் லாரி நிற்காமல், முன்னால் சென்ற சரக்கு ஆட்டோ, சரக்கு வேன், அரசு பஸ் என மோதியது. இதில் மொத்தம் 12 வாகனங்கள் சேதமடைந்தன. விபத்தில் டூவீலரில் சென்ற பர்கூர் அருகே தபால்மேட்டை சேர்ந்த அன்வர்(32), அவரது மகன் அசிம் (7) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சரக்கு ஆட்டோவை ஓட்டி சென்ற டிரைவரும் பலியானார். அவரது பெயர் விபரம் தெரியவில்லை. 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.