*விபத்து ஏற்படும் அபாயம்
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானம் எதிரே மேற்கு பகுதிக்கு டூவீலர், கார் செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே இந்த பகுதியில் குறுக்கு வழியில் வாகனங்கள் செல்வதை தடுக்க மாவட்ட காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 11 இடங்களில் ரூ.233 கோடி மதிப்பில் நான்கு வழிச் சாலையில் மேம்பாலங்கள் மற்றும் சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணிக்கான ஆய்வினை தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் பரத்வாஜ் பிரித்தி, விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் கடந்த 16.8.2024 அன்று மேற்கொண்டனர்.
அப்போது விருதுநகர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட (மதுரை -கன்னியாகுமரி) தேசிய நெடுஞ்சாலை 44ல் விருதுநகர்- புல்லலக்கோட்டை, வடமலைகுறிச்சி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சூலக்கரை, சாத்தூர் படந்தால், மற்றும் மதுரை மாவட்டம் சிவரக்கோட்டை, கள்ளிக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள நான்கு வழிச்சாலைகளில் மேம்பாலங்கள் மற்றும் சர்வீஸ் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நான்கு வழி சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாவட்ட விளையாட்டு மைதானம் எதிரே நான்குவழிச் சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்லாதபடி இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக மதுரையில் இருந்து சாத்தூர் நோக்கி செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே உள்ள சர்வீஸ் சாலை வழியாக சூலக்கரை சென்று, அங்கிருந்து பிரதான நான்கு வழி சாலை வழியாக சாத்தூர் சென்றன.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானம் எதிரே உள்ள பிரதான நான்கு வழிச்சாலையில் உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டு, எதிர் திசையில் உள்ள நான்கு வழிச்சாலை வழியாக சென்று, மேற்கு புறம் உள்ள மருத்துவக் கல்லூரி சர்வீஸ் சாலை வழியாக டூவீலர், கார் முதலானவை சென்று வருகின்றன. இதனால் மதுரையில் இருந்து வரக்கூடிய வாகனங்கள், எதிர் பகுதியில் குறுக்காக செல்லக்கூடிய வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
மேலும் இந்தப் பகுதியில் டூவீலரில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாதுகாப்பிற்காக மேம்பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், மாவட்ட விளையாட்டு மைதானம் எதிரே குறுக்காக மேற்கே செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படுவது தொடர்கிறது.
எனவே இந்தப் பகுதியில் குறுக்காக செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தும் வகையில், பிரதான நான்கு வழிச்சாலையில் (மெயின் ரோட்டில்) தடுப்பு வேலிகளை பணிகள் முடியும் வரை நிரந்தரமாக வைக்க மாவட்ட காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
