வாகனங்களுக்கு அருவங்காடு பகுதியில் தடை, கெடுபிடி ஜெகதளா ஹெத்தையம்மன் கோயில் விழாவில் பங்கேற்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்
குன்னூர் : ஜெகதளா ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவிற்கு செல்லும் வாகனங்களுக்கு அருவங்காடு பகுதியில் போலீசார் தடை விதிப்பு, கெடுபிடியால் விழாவில் பங்கேற்காமல் ஏமாற்றத்துடன் பக்தர்கள் திரும்பிச் சென்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தில் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்து நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த திருவிழாவையொட்டி ஜெகதளா சாலையில் செல்லவிருந்த வாகனங்களுக்கு தடை விதித்து, அருவங்காடு பகுதியில் தடுப்புகளை போலீசார் அமைத்தனர். பல்வேறு படுகர் இன மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து, தங்களது சொந்த வாகனங்களில் வந்த பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, சுமார் 2 கிமீ வரை நடந்து செல்ல உத்தரவிட்டனர்.
இதில் அம்மனை தரிசிக்க வந்த, வயது முதிர்ந்தவர்களையும், உடல் நலம் குன்றியவர்களையும் வாகனத்தை நிறுத்தி நடந்து செல்ல கூறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே கிராம மக்கள் 2 மாற்று வாகனங்களின் மூலம் பக்தர்களை கோயில் வரை அழைத்து செல்ல ஏற்பாடு செய்தனர்.
இருந்தபோதும் அந்த வாகனங்கள் போதியதாக இல்லை. மேலும் திருவிழாவிற்கு வந்த பத்தர்களை குன்னூர் போக்குவரத்து போலீசார் வாகனங்களை வேறு இடத்தில் நிறுத்தக் கூறியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கலைமகள், பாலாஜி நகர், அருவங்காடு தொழிற்சாலை குடியிருப்பு போன்ற பகுதிகளில் இருந்து செல்லும் பள்ளி குழந்தைகளின் தனியார் வாகனங்களையும் போலீசார் அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு, இடைபட்ட தூரம் வரை அனுமதி அளித்தனர். நோயாளிகள் மருத்துவரை சந்தித்துவிட்டு திரும்பும்போது மருத்துவ பரிசோதனை சீட்டை காண்பித்தும் அனுமதிக்கவில்லை என பாதிக்கப்பட்ட கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், ‘‘போலீசாரின் இந்த நடவடிக்கையால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூட்டம் குறைவாக காணப்பட்டது. அருவங்காடு பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாததாலும், போக்குவரத்து போலீசாரின் கெடுபிடியாலும் விழாவில் பங்கேற்க வந்த பக்தர்கள் பலர் திரும்பி சென்று விட்டனர். இளைஞர்கள் ஜெகதளா கிராமம் வரை நடந்து சென்றனர். ஆனால் முதியோர்களால் அவ்வளவு தூரம் நடக்க முடியவில்லை. மேலும் வாகனங்களையும் அனுமதிக்கவில்லை.
இதனால் மிகுந்த சிரமம் அடைந்தனர். முன்கூட்டியே போக்குவரத்து மாற்றம் குறித்து போலீசார் தெரிவித்திருந்தால் அனைவரும் மாற்றுச்சாலையில் இடைபட்ட தூரம் வரை வந்திருப்பார்கள். உள்ளூர் மக்களின் வாகனங்களையும் அனுமதிக்கவில்லை’’ என வேதனையுடன் தெரிவித்தனர்.
எனவே இனி வரும் விழா காலங்களில் வாகனங்களை முறையாக நிறுத்தவும், பள்ளி குழந்தைகள் செல்லும் வாகனங்களுக்கு வழிவகை செய்யவும், பக்தர்களிடம் கனிவாக நடந்து கொள்ளும் வகையில் போலீசாரை இது போன்ற பணிகளில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


