டிராக்டர் விற்பனையும் அபாரம்
கடந்த ஜூன் மாத வாகன விற்பனை நிலவரங்களை, இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒட்டு மொத்த அளவில் வாகன விற்பனை முந்தைய ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.84 சதவீதம் அதிகரித்துள்ளது. பிரிவு வாரியாக டூவீலர்கள் விற்பனை 4.73 சதவீதம், 3 சக்கர வாகனங்கள் 6.68 சதவீதம், பயணிகள் வாகன விற்பனை 2.45 சதவீதம் உயர்ந்துள்ளது. டிராக்டர்கள் விற்பனையைப் பொறுத்தவரை, விற்பனை முந்தைய மாதத்தை விட 7.25 சதவீதமும், முந்தைய ஆண்டை விட 8.68 சதவீதமும் அதிகரித்திருக்கிறது. இதில் நகர பகுதிகளில் 15.64 சதவீதமும், ஊரக பகுதிகளில் 7.22 சதவீதமும் விற்பனை ஆகியுள்ளது.
டூவீலர் விற்பனையில் சந்தைப் பங்களிப்பை பொறுத்தவரை கடந்த மாதத்தில் ஹீரோ நிறுவனம் 3,93,832 வாகனங்கள் விற்று 27.23சதவீதம், ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் 3,55,295 டூவீலர்கள் விற்று 24.56% சந்தைப் பங்களிப்பையும், டிவிஎஸ் நிறுவனம் 2,82,309 வாகனங்கள் விற்று 19.52% சந்தைப் பங்களிப்பையும், பஜாஜ் நிறுவனம் 1,56,360 வாகனங்கள் விற்று 10.81% சதவீத சந்தைப் பங்களிப்பையும் கொண்டுள்ளன. மற்ற நிறுவனங்களின் வாகன விற்பனை ஒரு லட்சத்துக்கு கீழும், சந்தைப் பங்களிப்பு 6 சதவீதத்துக்குக் கீழும் உள்ளது.
டூவீலர்களில் பெட்ரோல் வாகன சந்தைப் பங்களிப்பு 92.5 சதவீதமாகவும் எலக்ட்ரிக் வாகன சந்தைப் பங்களிப்பு 7.28 சதவீதம், சிஎன்ஜி/ எல்பிஜி வாகன சந்தைப் பங்களிப்பு 0.22 சதவீதமாக உள்ளது. டூவீலர்கள் விற்பனையை பொறுத்தவரை, நகர பகுதியில் 7.72 சதவீதம், ஊரக பகுதிகளில் 2.62 சதவீதம் உயர்ந்துள்ளது. 3 சக்கர வாகனங்கள் விற்பனை ஊரக பகுதிகளில் 8 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், நகர பகுதிகளில் 5.21 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. பயணிகள் வாகன விற்பனையிலும் 5.05 சதவீத உயர்வுடன் ஊரக பகுதிகள் கைகொடுத்துள்ளன. ஒட்டு மொத்த அளவில் நகரங்களில் வாகன விற்பனை 6.63 சதவீதமும், ஊரக பகுதிகளில் 3.42 சதவீதமும் உயர்ந்துள்ளது.
கடந்த மே மாத வாகன சில்லறை விற்பனையுடன் ஒப்பிடுகையில், ஒட்டு மொத்த அளவிலும், டூவீலர், 3 சக்கர வாகனங்கள் விற்பனையிலும் சரிவு காணப்படுகிறது. எனினும், மூன்று சக்கர பயணிகள் வாகன விற்பனை மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் 7.53 சதவீதம் அதிகரித்து, 45,429 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் விற்பனையும் 44.98 சதவீதம் அதிகரித்து, 5,903 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய ஆண்டு ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் இந்த வாகனங்களின் விற்பனை 54.95 சதவீதம் உயர்ந்து, 8,558 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதுபோல் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாத காலக்கட்டத்தில் வாகனங்களின் சில்லறை விறபனை 4.85 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் பிரிவு வாரியாக டூவீலர்கள் 5.02 சதவீதம், 3 சக்கர வாகனஙகள் 11.79 சதவீதம், டிராக்டர்கள் 6.29 சதவீதம், பயணிகள் வாகன விற்பனை 2.59 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.