Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

வாகன விற்பனை 40 சதவீதத்துக்கு மேல் உயர்வு

கடந்த அக்டோபர் மாதத்தில் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் சில்லறை விற்பனை முந்தைய ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் 40.5 சதவீதம் உயர்ந்துள்ளது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச உயர்வாகும் என ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாத வாகன விற்பனை மற்றும் 42 நாள் பண்டிகைக்கால வாகன சில்லறை விற்பனை விவரங்களை ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த மாதத்தில் ஒட்டு மொத்த அளவில் வாகன விற்பனை 40.5 சதவீதம் உயர்ந்து அதிகபட்ச உயர்வை எட்டியுள்ளது. டூவீலர்கள் விற்பனை 51.76 சதவீதம் அதிகரித்து 31.5 லட்சம் டூவீலர்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுபோல் பயணிகள் வாகன விற்பனை 11.35 சதவீதம் அதிகரித்து 5.57 லட்சம் வாகனங்கள் விற்பனையாகின. 3 சக்கர வாகனங்கள் விற்பனை 5.4 சதவீதம் உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டு வாகனங்களை பொறுத்தவரை 17.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. டிராக்டர் விற்பனை 14.2 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது, கட்டுமான உபகரணப் பிரிவு வாகன விற்பனை 30.5 சதவீதம் உயர்ந்துள்ளது என ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி குறைப்பு காரணமாக இந்த சாதனை அளவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் சி.எஸ்.விக்னேஷ்வர் கூறியதாவது: ஜிஎஸ்டி மறு சீரமைப்பு, பண்டிகை சீசன் மற்றும் கிராமப்புற மறுமலர்ச்சி ஆகியவை இணைந்து வாகன விற்பனைக்கு கைகொடுத்தளளன. கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஆட்டோ மொடைபல் சில்லறை விற்பனைக்கு ஒரு மைல்கல் மாதமாக நினைவுகூரப்படும்.

ஒட்டுமொத்த சில்லறை விற்பனை ஆண்டுக்கு 40.5 சதவீதம் என்ற வலுவான வளர்ச்சியைக் கண்டது. பயணிகள் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றின் விற்பனை வாழ்நாள் உச்சத்தை தொட்டுள்ளன. இது நுகர்வோர் நம்பிக்கை மற்றும் வலுவான பொருளாதார அடித்தளங்களைக்க் காட்டுவதாக உள்ளது. ஜிஎஸ்டி 2.0 மறுசீரமைப்பு காரணமாக 21 நாட்களாக அதாவது, செப்டம்பர் 21ம் தேதி வரை விற்பனையில் எந்த ஒரு பெரிய ஏற்றமும் ஏற்படாத நிலையில், 22ம் தேதி ஜிஎஸ்டி குறைப்பு அமல்படுத்தப்பட்ட பிறகு அக்டோபர் மாத வாகன விற்பனை அபரிமிதமாக இருந்தது. ஆட்டோமொபைல் துறையின் விரைவான மீட்சியாகவும் இது அமைந்தது. ஏறக்குறைய ஒரு தடைப் பந்தயத்தைப் போலவே, பண்டிகை கொண்டாட்டம் மற்றும் வரி குறைப்பு உற்சாகத்தால் தடைகளை தாண்டி விற்பனை வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி குறைப்பு என்பது ஆட்டோமோபைல் சந்தையில் மாற்றத்தை நிரூபித்துள்ளது. சிறிய கார்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் குறைந்ததால், வாகனங்களை வாங்குவது அடையக்கூடிய இலக்காக அமைந்தது. விலை குறைவு, சீசன் என மிகச் சரியான நேரத்தில் ஒருங்கிணைந்து, நடைமுறையில் விற்பனை சாதனையை சாத்தியமாக்கியது. சாதகமான பருவமழை, அதிக விவசாய வருவாய் மற்றும் வாங்கும் சக்தி ஆகியவற்றுடன் கிராமப்புற இந்தியா உண்மையான வளர்ச்சியை ஏற்படுத்தும் இயந்திரமாக மாறியது. இதனால்தான் கிராமப்புறங்களில் பயணிகள் வாகன விற்பனை நகர்ப்புறத்தை விட 3 மடங்கு வேகமாக வளர்ந்தது. அதே நேரத்தில் கிராமப்புற டூவீலர் வளர்ச்சி நகர்ப்புறத்தை விட இரண்டிப்பானது. இது இந்தியா ஆட்டோமொபைல் துறையின் சிறந்த மாற்றத்தை குறிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் வாகன விற்பனை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.73 சதவீதம் அதிகரித்து 1,63,91,421 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதில் டூவீலர்கள் விற்பனை 12.63 சதவீதம், 3 சக்கர வாகன விற்பனை 4.12 சதவீதம், வணிக பயன்பாட்டு வாகனங்கள் 5.18 சதவீதம், பயணிகள் வாகனங்கள் 5.76 சதவீதம் உயர்ந்துள்ளன.