Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வாகன ஓட்டுநர்கள், சூப்பர்வைசர்கள் துப்புரவு தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்

*பணிகள் பாதிப்பு: 300 டன் குப்பைகள் தேக்கம்

புதுச்சேரி : புதுச்சேரியில் குப்பை சேகரிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு பணிபுரியும் சூப்பர்வைசர்கள் ஏற்கனவே பணி செய்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அவர்களே மீண்டும் இந்த கம்பெனிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சூப்பர்வைசர்கள் அனைவரும் துப்புரவு பணியாளர்களிடம் மாதந்தோறும் மாமூல் கேட்டு பெறுவதாகவும், ஓட்டல், கடைகளில் வசூல் செய்வதாகவும் நிர்வாகத்திற்கு புகார் சென்றது. அதனடிப்படையில் உருளையன்பேட்டை தொகுதியில் பணிபுரிந்த ஒரு சூப்பர்வைசரை நிர்வாகம் பணியிடமாற்றம் செய்தது.

இந்நிலையில் சூப்பர்வைசர்களின் தூண்டுதலின் பேரில் ஓட்டுனர்கள் நேற்று காலை குப்பை சேகரிக்கும் வாகனங்களை இயக்காமல் மேட்டுப்பாளையம் பகுதியில் நிறுத்திவிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுவை நகர பகுதிகள் முழுவதும் குப்பை அள்ளும் பணிகள் முடங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் தனியார் நிறுவன உரிமையாளர் வரவேண்டும், அப்போது தான் போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்தனர். நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் பொதுமேலாளர் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ஓட்டுநர்கள் அனைவரும் தங்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படவில்லை, பாதுகாப்பு இல்லை, சம்பளம் பிடிப்பதை நிறுத்த வேண்டும் எனக் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் தொடர்ந்து நீடித்ததால் புதுச்சேரியில் நேற்று காலை முதல் குப்பைகள் சேகரிக்கும் பணி முடங்கியது.

பிறகு உள்ளாட்சி துறை சார்பில் கிராமப்புறங்களில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனத்திடம் பேசி அவர்களுடைய வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களை வைத்து குப்பை அள்ளும் பணி தொடங்கப்பட்டது. இப்போராட்டத்தால் நகர பகுதியில் 300 டன் குப்பைகள் தேக்கமடைந்ததால் ஆங்காங்கே குப்பைகள் சிதறி அசுத்தமாக காணப்பட்டது.

திடீர் சாலை மறியல்

தட்டாஞ்சாவடி ராஜீவ்காந்தி சிக்னல் அருகே ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கோரிமேடு போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட துப்புரவு ஊழியர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.

ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால் குண்டுகட்டாக தூக்கிச்சென்று 100க்கும் மேற்பட்டோரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இதனால் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.