பெங்களூரு: மாநிலத்தில் ஒரு காய்கறி வியாபாரி 4 ஆண்டுகளில் மொத்தம் ரூ.1.63 கோடி யுபிஐ பரிவர்த்தனைகளுக்காக, அவருக்கு ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கர்நாடக மாநில வணிக வரித்துறை சமீபத்தில், யுபிஐ பரிவர்த்தனை மூலம் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வருவாய் ஈட்டிய 14,000 வணிகர்களுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பியது.
தெருவோரக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள், டீக்கடைகள் என அனைத்து கடைகளும் கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறிவிட்ட நிலையில், ஓராண்டில் யுபிஐ மூலம் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருவாய் ஈட்டிய வணிகர்களுக்கு மாநில வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. கர்நாடகாவில் யுபிஐ மூலம் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வருவாய் ஈட்டிய கடைகள், வணிகர்கள் என 14,000 பேருக்கு வணிகவரித்துறை ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு மாநில வணிகவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
வியாபாரம் செய்பவர்கள் ஆண்டுக்கு ரூ.40 லட்சமும், சேவையை வழங்கும் தொழில் செய்பவர்கள் ஆண்டுக்கு ரூ.20 லட்சமும் வருவாய் ஈட்டியவர்களுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்விளைவாக பெங்களூருவில் பெரும்பாலான வணிகர்கள், யுபிஐ பரிவர்த்தனையிலிருந்து முழுக்க முழுக்க பணப் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். தங்கள் கடைகளில் ஒட்டப்பட்டிருந்த கியூஆர் கோடை அகற்றிவிட்டு, பணம் மட்டுமே என்று எழுதி வைத்துவிட்டனர்.
இந்நிலையில், காய்கறிக்கடைக்காரர் ஒருவருக்கு ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்தக்கூறி வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் யுபிஐ மூலம் ரூ.1.63 கோடி கிரெடிட் ஆகியிருக்கிறது. அதனால் அவருக்கு ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சாலையோரம் காய்கறிக்கடை வைத்திருக்கும் அந்த நபரின் வாழ்க்கைமுறைக்கும், அவருக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்ட தொகைக்கும் இடையேயான வித்தியாசம் தான் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.