வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு அதிமுக சார்பில் நாளை மறுநாள் மரியாதை!
சென்னை: வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-ஆவது நினைவு நாளையொட்டி கயத்தாறில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு நாளை மறுநாள் நடைபெற உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய ஆதிக்கத்தை துணிச்சலாக எதிர்த்தவரும்; வீரமும், விவேகமும் நிறைந்தவருமான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 226-ஆவது நினைவு நாளையொட்டி 16.10.2025 - வியாழக் கிழமை காலை 10 மணியளவில், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுடைய மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, சண்முகநாதன், செல்லப்பாண்டியன், சின்னத்துரை, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் C. ராஜூ, M.L.A. சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
போற்றுதலுக்குரிய வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.