வேடசந்தூர்: வேடசந்தூரில் போதையில் டூவீலர்களை அடித்து நொறுக்கி, தரையில் உருண்டு புரண்டு அட்ராசிட்டி செய்த வடமாநில வாலிபரை, போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள தனியார் நூற்பாலை மற்றும் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், வடமாநில வாலிபர் ஒருவர் மதுபோதையில் தள்ளாடியபடி நேற்று மாலை வேடசந்தூர் ஆத்துமேட்டு பகுதிக்கு வந்தார். அங்கு நிறுத்தி வைத்திருந்த டூவீலர்களை அடித்து நொறுக்கியும், அச்சுறுத்தியும் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள், அந்த வாலிபரை பிடித்து கை, கால்களை கட்டிப்போட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே கை, கால்களை கட்டிப்போட்டதால், வடமாநில வாலிபர் தரையில் உருண்டு பாம்பு போல நெளிந்து அட்ராசிட்டியில் ஈடுபட்டார். சம்பவ இடத்துக்கு வந்த வேடசந்தூர் போலீசார் போதை வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், அந்த வாலிபர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் (27) என்பதும், தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறால், அளவுக்கு அதிகமாக மது அருந்தி ரகளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ராகுலை எச்சரித்த போலீசார், அவருடன் வேலை பார்க்கும் நண்பர்களை வரவழைத்து, ஆட்டோவில் அனுப்பி வைத்தனர். மேலும், நாளை (இன்று) காவல்நிலையத்துக்கு வருமாறு அறிவுறுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.