கடலூர்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கீழ் அருங்குணம் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுபாஷ்(34). கீழ் அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவரான இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் சுபாஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உள்ளாட்சி தேர்தலில் சுபாஷ் வெற்றி பெற்றதால் முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, அதே ஊரை சேர்ந்த தாமோதரன்(60), ராஜதுரை(30), கவியரசன்(26), சுபகணேஷ்(29), தமிழ்வாணன்(28), வில்பார்(29), மணிமாறன்(41), தர்மராஜ்(52), தினேஷ்குமார்(27), பக்கிரிசாமி(47), மணிவண்ணன்(47), வெங்கடாபதி(39) ஆகிய 12 பேரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வெங்கடாபதி இறந்துவிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சரஸ்வதி நேற்று அளித்த தீர்ப்பில், பக்கிரிசாமி விடுதலை செய்யப்பட்டார். தாமோதரன், ராஜதுரை, கவியரசன், சுபகணேஷ், தமிழ்வாணன், வில்பார், மணிமாறன், தர்மராஜ், தினேஷ்குமார், மணிவண்ணன் ஆகிய 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதைக்கேட்டதும் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து 10 பேரும் பலத்த பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
