கடலூரில் விசிக நிர்வாகியும் ஊராட்சி மன்றத் தலைவருமான சுபாஷ் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
கடலூர் மாவட்டம் கீழ் அருங்குணம் ஊராட்சிமன்ற தலைவராக இருந்தவர் சுபாஷ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் சுபாஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக தெரியவந்தது. அதே ஊரை சேர்ந்த தாமோதரன் என்பவருக்கும் சுபாஷ்க்கும் உள்ளாட்சிமன்ற தேர்தலின் போது முன்விரோதம் இருந்த காரணத்தினால் தாமோதரன் தோல்வியடைந்ததை அடுத்து இந்த படுகொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த கொலை வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த வழக்கறிஞர் தர்மராஜ் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தற்போது 10 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், வழக்கறிஞர் உள்பட 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சரஸ்வதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை கேட்ட குற்றவாளியின் உறவினர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே கதறி அழுதனர். இதன் காரணமாக கடலூர் நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
