வாழப்பாடி அருகே பயங்கரம் திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை: மனைவி கண் முன் நடந்த கொடூரம்; 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
சேலம்: வாழப்பாடி அருகே திமுக கிளைச்செயலாளரை மர்மநபர்கள் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கரியகோயில் கல்வராயன்மலையில் உள்ள கீழ்நாடு ஊராட்சி கிராங்காடு மலைக்கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (45), விவசாயி. திமுக கிளைச்செயலாளராக இருந்தார். இவரது மனைவி சரிதா (40). பெத்தநாயக்கன்பாளையம் தெப்பக்குளம் பகுதியில் உள்ள பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கோகிலா, பரிமளா என்ற மகள்களும், நவீன் என்ற மகனும் உள்ளனர். ராஜேந்திரனுக்கு சொந்தமாக அப்பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் காபி, மிளகு பயிரிட்டுள்ளார். இதனால் தினமும் இரவில் அங்கு சென்று தங்குவதை ராஜேந்திரன் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில், அந்த தோட்டத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து ராஜேந்திரன், மனைவி சரிதாவுடன் பைக்கில் புறப்பட்டார். வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரம் சென்றபோது, ஒரு பள்ளமான பகுதியை கடந்து செல்ல வேண்டும் என்பதால், பைக்கில் இருந்து மனைவி சரிதா இறங்கியுள்ளார். ராஜேந்திரன் மட்டும் பைக்கை மெதுவாக ஓட்டிக்கொண்டு சென்றார். அப்போது, காட்டுப்பகுதியில் மறைவான இடத்தில் இருந்து மர்மநபர்கள், ராஜேந்திரனை நோக்கி நாட்டுத்துப்பாக்கியால் சுட்டனர். இதில், பால்ரஸ் குண்டுகள், அவரது பின் கழுத்துப்பகுதி மற்றும் தலையில் பாய்ந்தது.
இதில், ரத்தம் கொட்டிய நிலையில் கீழே சரிந்து விழுந்த ராஜேந்திரன் துடிதுடித்தார். பின்னால் நடந்து சென்ற மனைவி சரிதா, கணவன் குண்டு பாய்ந்து கீழே விழுவதை பார்த்து கதறியழுதார். அடுத்த சில நொடிகளில், சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார். இதையடுத்து, மறைவான இடத்தில் இருந்து துப்பாக்கியால் ராஜேந்திரனை சுட்டுக்கொலை செய்த மர்மநபர்கள், தப்பியோடினர். சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு கிராங்காடு கிராம மக்கள் வந்தனர். அவர்கள், கரியகோயில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் (பொ) கமலகண்ணன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுட்டுக்கொலை செய்யப்பட்டு கிடந்த ராஜேந்திரனின் உடலை மீட்டு, விசாரித்தனர். ஆத்தூர் டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீசாரும், அங்கு வந்து விசாரணை நடத்தினர். பிறகு ராஜேந்திரன் உடலை பிரேதப்பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி கௌதம்கோயல் நேற்று அதிகாலை அங்கு சென்று, ராஜேந்திரன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
அந்த இடம், காட்டுப்பகுதியாக இருப்பதால் மரங்களுக்கிடையே பதுங்கியிருந்து மர்மநபர்கள், இச்செயலில் ஈடுபட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். ராஜேந்திரனை சுட்டுக்கொல்லும் அளவிற்கு யாரிடமாவது அவருக்கு முன்விரோதம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவருக்கும் அருகில் விவசாயம் செய்து வரும் பெரியப்பா மகன்களான சகோதரர்கள் ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்து வந்ததும், அதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராஜமாணிக்கம், பழனிசாமியை பிடித்து வந்து கொலைக்கு தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இக்கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். ராஜேந்திரன் சமீபத்தில் வேறு நபர்களிடம் பகையை ஏற்படுத்திக் கொண்டாரா? அல்லது குடும்பத்திற்குள் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* மனைவியிடம் விசாரணை
திமுக கிளைச்செயலாளர் ராஜேந்திரன், துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது, அவர் அருகில் மனைவி சரிதா மட்டுமே இருந்துள்ளார். அவர், பைக்கில் இருந்து இறங்கிய சில நொடிகளில் இச்சம்பவம் நடந்துள்ளது. அதனால், நடந்த சம்பவம் பற்றி சரிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருட்டில் துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்ட இடத்தில் இருந்து எத்தனை பேர் ஓடினார்கள்? யாரையாவது பார்த்தீர்களா? என விசாரிக்கின்றனர். அதேநேரத்தில் தினமும் இரவு 7.30 மணி முதல் 8 மணிக்குள் ராஜேந்திரன் மனைவியுடன் தோட்டத்திற்கு செல்வதை நோட்டமிட்டு, இச்சம்பவத்தை மர்மநபர்கள் அரங்கேற்றியுள்ளனர். அதனால், இவர்களின் நடமாட்டத்தை அறிந்த நபர்கள் தான், இக்கொலையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். அந்த கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
* உடலை வாங்க மறுப்பு
கொலையான ராஜேந்திரன் உடல், பிரேதப்பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது மனைவி சரிதாவிடம் கரியகோயில் போலீசார், புகார் பெற்று கொலை வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து உடலை பிரேதப்பரிசோதனை செய்ய போலீசார் ஏற்பாடு செய்தனர். இதற்காக மனைவி சரிதா, அவரது குடும்பத்தினரை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது, மனைவி சரிதா மற்றும் உறவினர்கள், கொலையாளிகளை கைது செய்தால் தான், ராஜேந்திரனின் உடலை பெற்றுக்கொள்வோம் எனக்கூறிவிட்டனர். இதனால் நேற்று, பிரேதப்பரிசோதனை நடக்கவில்லை. தொடர்ந்து உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
* நாட்டுத்துப்பாக்கி புழக்கம் பற்றி கூறியதால் கொலை?
கொலையான திமுக கிளைச்செயலாளர் ராஜேந்திரன், கிளாங்காடு மலைக்கிராமத்தின் வனக்குழு தலைவராக இருந்துள்ளார். இதனால், வனத்துறை அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் இருந்துள்ளது. சமீபத்தில் மலைக்கிராமங்களில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள், அதனை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துவிடும்படி மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி அறிவுறுத்தினார். அதில், துப்பாக்கியை தானாக வந்து ஒப்படைத்தால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், தொடர்ந்து நாட்டுத்துப்பாக்கியை வைத்து வேட்டையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த விவகாரத்தில் கரியகோயில் பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் யாரிடமெல்லாம் நாட்டுத்துப்பாக்கி இருக்கிறது என்ற தகவல்களை ராஜேந்திரன் தெரிவித்ததாகவும், அதனால் சிலருடன் மோதல் போக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த மோதல் விவகாரத்தில் இக்கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* 3 தனிப்படைகள் அமைப்பு
ராஜேந்திரனை சுட்டுக்கொன்ற கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து எஸ்பி கௌதம்கோயல் உத்தரவிட்டுள்ளார். பிடிபட்ட ராஜமாணிக்கம், பழனிசாமியிடம் ஒரு தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்
நியாயம் கிடைக்காவிடில் தற்கொலை செய்வேன்; மகள் பேட்டி
ராஜேந்திரன் மனைவி சரிதா கூறுகையில், பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள காட்டிற்கு டூவீலரில் நாங்கள் இருவரும் சென்றோம். அப்போது மர்மநபர்கள் துப்பாக்கியால் அவரை சுட்டுவிட்டனர். 10 ஆண்டுகளாக ராஜமாணிக்கம், பழனி ஆகியோர் தான் எங்களுக்கு எதிரி. ஏற்கனவே, உனது தாலியை அறுப்பதாக கூறி அவர்கள் மிரட்டியுள்ளனர் என்றார். அவரது மகள் பரிமளா கூறுகையில், எனது தந்தை இறப்பிற்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்றார்.


