Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாசக் கறிவேப்பிலையே!

இதைப் பெரும்பாலானவர்கள் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இது இல்லாமல் எந்த சமையலும் நடக்காது. எஸ்... நீங்க யூகிச்சது சரிதான்! கறிவேப்பிலை குறித்த சுவாரஸ்யங்கள் பற்றிதான் இந்தக் கட்டுரை. டேஸ்ட் பண்ணுங்க! கி.பி.1 - 4ம் நூற்றாண்டில்தான் கறிவேப்பிலையின் வரலாறு தொடங்கியதாக கூறப்படுகிறது. தமிழ் மற்றும் கன்னட இலக்கியங்களில் கறிவேப்பிலை குறித்து பல குறிப்புகள் காணப்படுகிறது. இது கரி என்ற சொல்லாக பதிவாகி இருக்கிறது. மசாலா சாஸ் என்ற அர்த்தத்தைத் தரும் காரி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்தே இந்தக் கரி என்ற சொல் உருவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. பின்னர்தான் இது கறிவேப்பிலை என்ற பெயரில் அழைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ் மற்றும் கன்னடத்தின் ஆதிகால இலக்கியங்களில் காய்கறிகளுக்கு சுவையூட்டும் ஒரு பொருள் என கறிவேப்பிலையைக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா மற்றும் ஹைனான் ஆகிய நாடுகளில்தான் கறிவேப்பிலை முதன்முதலாக வளர்ந்திருக்கிறது. தற்போது தென்கிழக்கு ஆசியாவிலும் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளிலும் கறிவேப்பிலை பரவலாகப் பயிரிடப்படுகிறது. இது இந்தியா முழுவதும் கடல் மட்டத்திலிருந்து 1500 முதல் 1655 மீ உயரம் வரை உள்ள பகுதிகளில் நன்றாக வளர்கிறது. அந்தமான் தீவுகளிலும் கறிவேப்பிலை சாகுபடி செய்யப்படுகிறது.

குவாங்டாங், ஹைனான், பூடான், லாவோஸ், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் 500-1600 மீ உயரம் கொண்ட ஈரமான காடுகளைப் போலவே ஆசிய பிராந்தியத்தின் பிற பகுதிகளிலும் இது வளர்கிறது. தென்னிந்தியாவில் இருந்து மலேசியா, தென்னாப்பிரிக்கா நாடுகளில் குடியேறியவர்கள் மூலம் கறிவேப்பிலை சென்றிருக்கிறது. உலக அளவில் கறிவேப்பிலையில் பல்வேறு ரகங்கள் இருக்கின்றன. இதில் இந்தியாவில் இரண்டு மட்டுமே காணப்படுகின்றன. அவை முர்ரேயா கோனிகி (ஸ்ப்ரெங்) மற்றும் முர்ரேயா பானிகுலாட்டா (ஜாக்). இவை சூரிய ஒளியில் நன்கு வளரும் தன்மை கொண்டவை. முர்ரேயா கோனிகி ரகம் தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது.