Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வருசநாடு வைகை நதிக்கரையில் பாறை முழுக்க மர்ம உருவங்கள்

*பாதுகாக்க பழமை ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை : தேனி மாவட்டம், வருசநாடு மலைக்கிராமத்தின் அருகே மொட்டைப்பாறை மலையில் உள்ள ‘கல் புடவு’ பகுதி தொன்மையான பாறை ஓவியத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது. இங்கு காணப்படும் சிவப்பு, வெள்ளை நிற ஓவியங்கள் பல அடுக்குகளில் வரையப்பட்டிருப்பதோடு, மனிதர்கள் பல தலைமுறையாக தொடர்ந்து இப்பகுதியை பயன்படுத்தியதற்கான சான்றாக திகழ்கிறது.

மூல வைகை ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ள மொட்டைப்பாறை மலையின் தெற்கு சரிவில் சேகர் என்பவரது நிலத்திற்கு அருகில் கல் புடவு என்ற சிறிய குகை பகுதி உள்ளது. கல் புடவின் கிழக்கு பக்க பாறை சுவரில், சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஓவியங்கள் இருப்பதை தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் செல்வம் கண்டறிந்து வெளிப்படுத்தினார். இப்பகுதியை தொடர்ந்து ஆய்வு செய்து வரும் இவர் கூறியதாவது:

குகைத்தளத்தின் பாறைச்சுவர் முழுக்க சிவப்பு நிற ஓவியங்கள் நேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றன. புல்வெளிகள், மரங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், மலைமுகடுகளை குறிக்கும் கோடுகள், செங்குத்தாக வரையப்பட்ட நீளமான கோடுகள், நீள்வட்ட வடிவில் இரண்டு வட்டங்கள், வட்டத்தின் உள்பகுதிகள் என அலை அலையான கோடுகளால் முழுமையாக நிரப்பப்பட்டிருக்கின்றன.

பார்ப்பதற்கு பலாப்பழம் போன்று காட்சி தருகிறது. இந்த குகை தளத்தை புனித இடமாகவும் சடங்குகள் செய்யும் இடமாகவும் பயன்படுத்தி இருக்கலாம். இங்கு வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் வரலாற்று பதிவாகும். பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு வழங்குவதாக இருக்கிறது.

சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ள ஓவியங்களின் மேல், பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் பல அடுக்குகளாக வெள்ளை நிறத்தில் ஓவியங்களை வரைந்து உள்ளனர். கை, கால்களை விரித்தபடி நிற்கும் மனித உருவங்கள், கோட்டுருவங்களாக வரையப்பட்டிருக்கின்றன.

மின்னல் உருவக்குறியீடு, இனக்குழு தலைவனின் உருவம், விலங்குகள், பெரிய மீன், சூரியன், சந்திரன், அடையாளம் தெரியாத இன்னும் பல மர்ம உருவங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் வேட்டைச் சமூகம் என்பதையும், குழுவாக வாழ்ந்ததையும் வெளிப்படுத்துகிறது. சூரியன், சந்திரன் போன்ற வடிவங்களை வரைந்து இருப்பது அவர்கள் இயற்கையை கடவுளாக கருதி வணங்கினர் என்பதற்கு சான்றாக இருக்கிறது.

மீன் உருவம், இவர்களது உணவில் மீன் முக்கிய பங்காற்றியிருப்பதையும், ஆற்றங்கரை வாழ்வையும் குறிக்கிறது. குழு தலைவரின் உருவம் தலைமை பங்கினை காட்டுகிறது. மொட்டைப்பாறை மலையின் கல்புடவு பாறை ஓவியங்கள், பழங்காலம் முதல் வரலாற்று காலம் வரை மனிதர்கள் வாழ்ந்த சமூக பண்பாட்டு மத அடையாளங்களை வெளிப்படுத்தும் முக்கிய தொல்லியல் சான்றாக இருக்கிறது.

இவை பழங்குடிகளின் கலை வெளிப்பாடு, இயற்கை வழிபாடு மற்றும் சமூக ஒற்றுமையை அறிய உதவுகின்றன. தென்னிந்திய பாறை ஓவிய வரிசையில் புதிதாக கண்டறியப்பட்ட இந்த வருசநாடு மொட்டைப்பாறை ஓவியங்கள் தனிச்சிறப்பு கொண்டிருக்கிறது. இந்த ஓவியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார்.