வருசநாடு : கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு, தும்மக்குண்டு உப்புத்துறை ஆட்டுப்பாறை, நொச்சி ஓடை, கரட்டுப்பட்டி துரைச்சாமிபுரம் அய்யனார்கோவில், தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழ் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக சர்க்கரை கொல்லி ஆவாரம் பூ மூலிகை மற்றும் பல்வேறு மூலிகைகள் பறிக்கும் பணியில் மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்கள்.
தற்பொழுது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மூலிகையான சர்க்கரைக்கொல்லி ஆவாரம் பூ மூலிகைகள் பறிக்கும் பணியில் மலைவாழ் பொதுமக்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளார்கள். ஓரு கிலோ 85 ரூபாய் முதல் 100 வரை விலை போய்க் கொண்டிருக்கிறது. இந்த மூலிகையை மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்து செல்கிறார்கள். அன்றாட வயிற்றுப் பிழைப்பிற்கு போதியதாக இல்லை எனவும் மலைவாழ் மக்கள் புலம்பி வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு வனப்பகுதிக்கு சென்றால் மாலை 6 மணி வரை மலைப்பகுதியில் மூலிகையைப் பறிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் மலைப்பகுதிகளில் செல்கிற பொழுது வனத்துறை அச்சுறுத்தல் இருந்து வருகிறது. எனவே வனத்துறை அச்சுறுத்தலை தடுப்பதற்கும், தேனி மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து மலைவாழ் மக்களின் தலைவன் வேலுச்சாமி கூறுகையில், மலைகளில் வாழும் எங்களுக்கு வனத்துறை மற்றும் காவல்துறை முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் நாங்கள் தேனெடுத்தல், கிழங்கு பறித்தல், மூலிகை பறித்தல் உள்ளிட்ட பணிகளை காலம் காலமாக நான்கு தலைமுறையாக செய்து வருகிறோம். இதற்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க வேண்டும். இதற்கு தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


