வருசநாடு : வருசநாடு கிராமத்தில் 64.5 ஏக்கர் பரப்பளவில் பஞ்சந்தாங்கி கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயின் பெரும் பகுதியை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் கண்மாயில் நீர் தேக்கி வைக்க முடியாமல் வருசநாடு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது.
இதைடுத்து வருசநாடு பகுதி விவசாயிகள் தொடர் போராட்டம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்மாயில் இருந்த தனிநபர்கள் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டது.
இதையடுத்து கண்மாயை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை தொடர்பாக வருசநாடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினர். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் கண்மாயில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றது.இதில் முதற்கட்டமாக கண்மாய் கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று முடிந்தது.
அதன் பின்னர் சில காரணங்களால் கண்மாய் தூர்வரப்படாமல் பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது வரை தூர்வாரும் பணிகள் தொடங்கவில்லை. இதனால் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதில் நீர் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.
மேலும் தூர்வாரப்படாத காரணத்தால் கண்மாயில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே தேனி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கண்மாயில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கண்மாய்க்கான நீர் வரத்து வாய்க்கால்களையும் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.