மதுரை: மதுரையில் வரும் 12ம் தேதி துவங்கும் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரசாரத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மாநகர் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். கரூரில் விஜய் பிரசாரக்கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை புதிதாக எந்த கூட்டத்திற்கும் அனுமதி வழக்கப்படாது என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜ மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்கிறார். மதுரையில் அக். 12ம் தேதி இவரது பிரசாரத்தை பாஜ தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜே.பி.நட்டா தொடங்கி வைக்கிறார்.
இதற்காக போலீஸ் அனுமதி வேண்டி மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் அலுவலகத்தில் பாஜ மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி மாநில தலைமை சார்பில் நேற்று முன்தினம் மனு அளித்திருந்தார். மனுவில், கோ.புதூர் பஸ் ஸ்டாண்ட், முனிச்சாலை சந்திப்பு, அண்ணா நகர் அம்பிகா திரையரங்கம் சந்திப்பு உள்ளிட்ட ஐந்து இடங்களில் அனுமதி தருமாறு கேட்டிருந்தனர். இதையடுத்து அண்ணா நகர் அம்பிகா திரையரங்கு சந்திப்பில் பிரசார பயண துவக்க விழாவை நடத்த மாநகர் போலீசார் அனுமதி அளித்தனர். குறிப்பாக அங்கு நின்று கொண்டு மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் பிரசாரத்துக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரசார பயணத்திற்கு வரும் மக்களுக்கு குடிநீர் கொடுக்க வேண்டும். கர்ப்பிணிகள், குழந்தைகள் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என பல்வேறு நிபந்தனைகளை மாநகர போலீசார் விதித்துள்ளனர்.