Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வரகு விளையுது... வருமானம் பெருகுது!

5 ஏக்கர் விவசாயம் பண்றோம். அதுல ஒரு ஏக்கர்ல வரகு போட்டிருக்கோம். வரகுல உழவு ஓட்றது, விதைக்கறது, ரெண்டு களை எடுக்குறது மட்டுந்தான் வேலை. களையைக் கூட நாங்களே எடுத்துடுவோம். அறுவடை செய்றதுக்கு மட்டும் 4 ஆள் வைப்போம். கட்டு கட்றதை நாங்களாவே பார்த்துப்போம். வைக்கோலை நாங்க மாட்டுக்கு தீவனமா பயன்படுத்திக்கறோம்” என வரகு சாகுபடியின் சிறப்பம்சங்களை விளக்கி பேச ஆரம்பித்தார் கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த சுமதி. பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வட்டத்தில் செயல்படும் நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழுவில் ஓர் உறுப்பினர்தான் சுமதி. இந்தக்குழு மூலம் வரகை சாகுபடி செய்வதோடு, அதை முறையாக விற்றும் லாபமும் பார்க்கிறார். அதுகுறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``30 வருஷமா கருவைக்காடா கிடந்த நிலத்தை நான்தான் தோண்டி திருத்தி, குழுவின் நிறுவனர் சொன்னபடி, வரகு விதைக்கணும்ன்னு விதைச்சேன். தொடர்ந்து 6 வருஷமா இந்தப் பயிரை போட்டுகிட்டு இருக்கோம். 2லர்ந்து 3 அடிக்கு பயிர் வளர்ந்தப்புறம், குருத்து வர்றதுக்கு முன்னாடி ஒரு மழை நாள்ல பயிரை ஆடுகளை விட்டு மேய்ப்போம். ஆடு தோகைகளை மட்டும் தின்னும். இதனால செடி வளந்தப்புறம் சாயாம இருக்கும். தோகைகள் அதிகமா இருந்தா செடி வளர்ந்தப்புறம் சாஞ்சி, பதரா போயிடும். அப்படி ஆகாம இருக்க இதைச் செய்யறோம். ஆடு மேயும்போது வேர்ப்பாகத்தை நல்லா மண்ணோட சேர்த்து மிதிக்கறதால நல்லா வேர்பிடிச்சி, விளைச்சலும் அதிகரிக்கும். தை மாசத்துல அறுவடை செய்யும்போது, ஏக்கருக்கு 10 மூட்டை கிடைக்கும். மழையைப் பொருத்து விளைச்சல் மாறும். ஏக்கருக்கு 8லர்ந்து 10 மூட்டை வரைக்கும் கிடைக்கும். எங்க ஊர்ல 10 பேர் வரகு போட்டிருக்கோம். குழுவுல நாங்களாவே கூட்டம் போட்டு விலை நிர்ணயிப்போம். மார்க்கெட்ல என்ன விலை போகுதோ அதைவிட கூடுதலா விலை நிர்ணயிச்சி விக்க முடியுது. இது இல்லாம சுத்தி வரப்புல ஆமணக்கு போட்டுடுவோம். அந்த விதைகளை விளக்கெண்ணெய் ஆட்றவங்களுக்கு விக்கறதுல ஒரு மூவாயிரம் ரூபாய் கிடைக்கும்”.

வரகுகளை குரங்கு மட்டும் கொஞ்சம் பிச்சி போட்டுடும். அதால தின்ன முடியாது. வயல்லயே போட்டுட்டு போயிடும். குருவி மாதிரி பறவைலாம் தின்னாது. வரகு வறட்சிய தாங்கி வளரும். ஒருமுறை 50 நாட்களுக்கு தொடர்ந்து மழை இல்லாம காஞ்சி போச்சி. ஒரு மழை வந்ததும் மறுபடியும் துளிர்த்துடுச்சி. அந்த வருஷம் 10 மூட்டை விளைஞ்சது. அந்த வருசம் மத்த பயிர்லாம் விளையாததால வந்த நஷ்டத்தை வரகுல வந்த லாபம்தான் ஈடுகட்டுச்சி. அப்ப வரகு நமக்கு வருமானம் தர்ற பயிர்தானே?” என நம்மிடம் கேட்கிறார்.இந்த ஊரில் உள்ள கவிதாவும் வரகு மூலம் வருமானம் பார்க்கிறார். அவரிடம் பேசியபோது “ஆடிப்பட்டத்துல விதைத்து மார்கழி கடைசியில் அறுவடை செய்வோம். மாட்டு எரு மட்டுந்தான் குடுப்போம். உரம், மருந்து எதுவும் கிடையாது. தண்ணிலாம் பாய்ச்ச வேண்டியது இல்ல. மானாவாரி பயிர் என்பதால் மழை தண்ணியிலயே வளரும். 3 அடிக்கு மேல வளரும் என்பதால் அதிக மழை பெஞ்சாலும் பெரிய பாதிப்பு இருக்காது. பொதுவா ஏக்கருக்கு 10 மூட்டை வரும். ஆனா எங்க வயல்ல ஆடு மாடு தொல்லை இருக்கறதால 4 மூட்டை வரைக்கும் கிடைக்கும். போன வருஷம் கிலோ 38 ரூபாய்க்கு எடுத்தாங்க. சாண எரு மட்டும் போடறதால பெரிய செலவு இல்ல. அதனால இந்த வெல எங்களுக்கு லாபம்தான். விதைக்கு நாங்க அறுவடை பண்றதுலருந்தே எடுத்து வச்சிப்போம். தானியத்தை காயவச்சி அப்டியே சாக்குல எடுத்து வச்சிடுவோம். ஒரு ஏக்கருக்கு விதைக்க 2 மரக்கா, 3 மரக்கா போதும்” என்றார்.

கூட்டமைப்பின் செயல்பாடுகளைப் பற்றி பேசிய பானுமதி “இந்த அமைப்பில் 200 விவசாயிகள் இருக்காங்க. எல்லாரும் பெண் விவசாயிகள். நாங்களே கணக்கு வழக்கு பாப்போம். வரகோட கொள்முதல் விலையை நாங்களே தீர்மானிப்போம். வெளிமார்க்கெட்ல கிடைக்கறத விட கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்வோம். போன வருஷம் கிலோ 38 ரூபாய்க்கு வாங்கினோம். வரகை வரகு அரசியா மாத்துற மிஷின் 2 இருக்கு. வரகரிசியை மாவாக அரைக்கும் மிஷின் ஒன்னு இருக்கு. வரகரசியை வறுத்து உடைச்சி ரவையாக்குற மிஷின் ஒன்னு இருக்கு. நம்ம மில்லுல 3 பெண்கள் வேலை செய்றாங்க. இந்த வரகரிசியை நாங்களே நேரடியா விற்கறோம். அது இல்லாம தமிழ்நாட்ல நடக்கற விதைத் திருவிழாக்களில் நாங்க ஸ்டால் போட்டு வரகரிசியை விக்கறோம். இயற்கை வேளாண்மைல விளையற வரகுன்றதாலதான் நாங்க கூடுதல் விலைக்கு வாங்கி, கூடுதல் விலைக்கு விக்கவும் முடியுது. இயற்கை முறையிலதான் பயிர் செய்றாங்களான்னு கண்காணித்து உறுதி செய்ய அருள், கணேசன்னு ரெண்டு பேர் அலுவலகத்தில் இருக்காங்க’’ என்றார்.

இந்தக் கூட்டமைப்பின் நிர்வாகம் மற்றும் விற்பனைப் பிரிவு ஒருங்கிணைப்பாளரான அருள் கூறுகையில், ``விவசாயிகள் வரகு விதைக்கறதுக்கு முன்னாடியே போய் மண் எப்டி இருக்கு, சரியா உழவு ஓட்டி இருக்காங்களான்னு பாப்போம். விதைக்கும்போது எப்டி விதைக்கறாங்கன்னு பாப்போம். இயற்கை முறையில் விளைந்ததுன்றதாலதான் கூடுதல் விலைக்குக் கொள்முதல் செய்து, கூடுதல் விலைக்கு விற்க முடியுதுன்றதால அதை ரொம்ப கண்டிப்பா கண்காணிக்கறோம். அறுவடை செய்யப்பட்ட வரகை மூட்டைகளில் விவசாயிகளின் பெயர் எழுதி, மில்லுக்கு கொண்டு போயிடுவோம். மூட்டைகள் சலிக்கவும் அரவைக்கும் வரும்போது அவங்களை நேரடியா கூப்பிட்டு அவங்க முன்னாடியே தரம் பிரிச்சி எடை போட்டு காட்டிடுவோம். வயல்லர்ந்து வரகை கொண்டுவரும்போதே முன்பணமா ஒரு தொகை குடுத்திருப்போம். எடை போட்டு முடிச்சப்புறம் கிலோவுக்கு இவ்ளோன்னு கணக்கு போட்டு மீதித் தொகையை குடுத்துடுவோம்’’ என்கிறார்.

தொடர்புக்கு:

சுமதி: 99437 38710

அருள்: 96264 70266.