சென்னை: நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன், சைபர் கிரைம் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் 7 மணி நேரம் தாமதமாக வந்ததும், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள், பொதுமக்களுக்கு குடிநீர் கூட வழங்க ஏற்பாடு செய்யாமல் கண்டுகொள்ளாமல் விட்டதாலும், கூட்ட நெரிசல் நேரத்தில் பொதுமக்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்கள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளன.
அதேநேரத்தில், 41 பேர் பலியான சம்பவத்துக்கு நடிகர் விஜய், இதுவரை ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்று பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நீதிபதியை வரதராஜன் விமர்சித்துள்ளார். நேதாஜி மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வரும் இவர், நீதிபதியை விமர்சித்து வீடியோ பதிவிட்டுள்ளார். நீதிபதியை விமர்சித்த 4 பேர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட நிலையில் தற்போது வரதராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.