லஞ்ச வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பியபோது தலையில் கல்லை போட்டு விஏஓ கொலை: நாகை அருகே பயங்கரம்
நாகப்பட்டினம்: நாகை அருகே லஞ்ச வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பியபோது, தலையில் கல்லை போட்டு விஏஓ கொலை செய்யப்பட்டார். நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை செல்லூர் அருகே சாலையோரத்தில் தலையில் ரத்த காயங்களுடன் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு நேற்று (8ம் தேதி) காலை தகவல் வந்தது. இதன்பேரில் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே வாழக்கரையை சேர்ந்த ராஜாராமன் (38), திருவாய்மூர் விஏஓவாக இருந்தவர் என்றும், கூடுதல் பொறுப்பாக எட்டுக்குடி விஏஓவாக பணியாற்றிய போது 2024ல் ரூ.500 லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்றும் தெரியவந்தது.
இவர் லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜாராகி விட்டு காரைக்கால் அருகே கோட்டுச்சேரியில் வசிக்கும் மனைவி மனோசித்ரா, மகன் தஸ்வின்(8) ஆகியோரை பார்த்து விட்டு இரவு பைக்கில் வாழக்கரை திரும்பியபோதுதான் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வெளிப்பாலையும் போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் வந்த பைக் சாலையோரம் பூட்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளதும், அங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ள வயல் பகுதியில் தலையில் இரண்டு கற்களை போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இரவு நேரத்தில் ராஜாராமன் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அப்பகுதியில் திருநங்கைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் அவர்களால் ஏற்பட்ட பிரச்னையால் கொலை செய்யப்பட்டாரா? என தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* பாமக மகளிரணி தலைவியின் கணவர் அடித்துக் கொலை
திருப்பத்தூர் லட்சுமி நகரை சேர்ந்தவர் அலிஜான் என்கிற அந்தோணி (65). இவரது மனைவி நூருன்னிசா, பாமக மகளிரணி தலைவி. அதேபகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (50). இவரும் அலிஜானும் வாணியம்பாடி மெயின்ரோடு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் செக்யூரிட்டியாக பணிபுரிகின்றனர். இவர்களுக்குள் அவ்வப்போது வேலை ஷிப்ட் மாற்றம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு கார்த்திகேயன் பணிக்கு வரவேண்டிய நிலையில் காலை 11 மணிக்கு வந்ததாக தெரிகிறது. இதனை அலிஜான் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது இவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், அங்கிருந்த கல்லை எடுத்து அலிஜான் மீது வீசியதோடு அவரை சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அலிஜான் பரிதாபமாக இறந்தார்.

