*போலீசார் சமாதானம்
வானூர் : வானூர் தாலுகா குன்னம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு செல்வதற்கு இரு பகுதிகளில் நுழைவு வாயில் உள்ளது.
தற்போது பின்புறம் உள்ள நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் அந்த வழியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். பின்னர் இதை கண்டித்து அங்கேயே நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வானூர் இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தியிடமும் விளக்கம் கேட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் பேசிய தலைமை ஆசிரியர் பள்ளிக்கு பிரதான வாயில் திறக்கப்பட்டுள்ளது. மற்றொரு வாயில் வழியில் தற்போது பெய்துள்ள மழையால் மழைநீர் அதிகமாக செல்கிறது.
எனவே அந்த பகுதியில் மாணவ, மாணவிகள் வந்தால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அந்த கேட் தற்காலிகமாக பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளது என்று கூறினார். இருப்பினும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி நேரங்களில் கேட்டை திறந்து வைப்பதற்கு ஒப்புதல் தெரிவித்தார். அதை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர்.


