திண்டிவனம்: வன்னியர் இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் நினைவு தினத்தையொட்டி, ராமதாஸ், அன்புமணி ஆகியோர் தனித்தனியாக அஞ்சலி செலுத்தினர். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கக்கோரி வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 1987 செப்டம்பர் 17ம்தேதி தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். இவர்களின் நினைவாக செப்.17ம் தேதியை இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளின் நினைவு தினமாக பாமகவினர் கடைபிடித்து வருகின்றனர்.
ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால், பாமகவில் நடந்த அதிகார மோதலால் அன்புமணியை கட்சியை விட்டு ராமதாஸ் நீக்கினார். இதனால் இருதரப்பும் திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தை கைப்பற்ற முயற்சித்தனர். அப்போது ஏற்பட்ட மோதல் காரணமாக வன்னிய சங்க அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் நிலவியதால், வன்னியர் சங்க அலுவலகத்தில் விழா நடத்தவும், ராமதாஸ் மற்றும் அன்புமணி பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.
இதனால், இந்தாண்டு அன்புமணி ஆதரவாளர்கள் திண்டிவனம் தனியார் மண்டபத்திலும் ராமதாஸ் ஆதரவாளர்கள் தைலாபுரம் தோட்டத்திலும் அஞ்சலி செலுத்த முடிவு செய்தனர். தைலாபுரத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கத்தில் நேற்று 21 தியாகிகளின் உருவப் படங்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் வுரவத் தலைவர் ஜி.கே.மணி, ராமதாசின் மூத்த மகளும், மாநில நிர்வாக குழு உறுப்பினருமான ஸ்ரீகாந்தி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பேராசிரியர் தீரன், மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சித்தணி, பனையபுரம், கொள்ளுகாரன்குட்டை போன்ற இடங்களில் உள்ள தியாகிகள் நினைவு தூண்களில் மலர்தூவி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக, பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல திண்டிவனம் தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தியாகிகள் படங்களுக்கு அன்புமணி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதில் பொருளாளர் திலகபாமா, தலைமை நிலைய செயலாளர் செல்வகுமார், மாநில சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு, சிவக்குமார் எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் தியாகிகள் நினைவு தூண்களில் அன்புமணி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், 3 தியாகிகள் குடும்பக்கங்களுக்கு அன்புமணி நிதியுதவி வழங்கினார். இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* காரில் கொடியை மாற்றிய ராமதாஸ்
ராமதாஸ் செல்லும் காரில் எப்போதும் பாமக கொடி ஏற்றப்பட்டு இருக்கும். நேற்று இடஒதுக்கீட்டு போராளிகள் நினைவிடத்திற்கு ராமதாஸ் சென்றபோது தனது காரில் இருந்து பாமக கொடியை இறக்கிவிட்டு, தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வன்னியர் சங்க கொடியை ஏற்றி சென்றார்.