வன்னியர் சங்க கட்டிடம் விவகாரம் கோயில் புறம்போக்காக இருந்தாலும் அரசு நிலமே: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்
புதுடெல்லி: செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலை பட் சாலையில் உள்ள 41,952 சதுர அடி நிலத்தை, காசி விஸ்வநாதர் தேவஸ்தானம் தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. ஆனால் அந்த இடத்தில் வன்னியர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இருப்பினும் சம்பந்தப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாக கூறி பல்லாவரம் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதையடுத்து இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து கடந்த ஆண்டு இறுதியில் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் எஸ்.சந்தூர்கர் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வன்னியர் சங்கம் கட்டப்பட்டுள்ள இடமானது கோயிலுக்கு சொந்தமானதாகும். இதில் எதிர்மனுதாரர் அந்த இடத்தை புறம்போக்கு என்று தெரிவிக்கிறார்கள். அப்படி இருந்தாலும் அது அரசுக்கு தான் சொந்தமானதாகும்.உன்மையை சொல்ல வேண்டும் என்றால் வன்னியர் சங்கம் கட்டிடம் அமைப்பதற்காக அந்த இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உள்ளனர் என்று தெரிவித்தார்.
இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் வன்னியர் சங்க கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக முன்னதாக விதிக்கப்பட்ட இடைக்கால தடை உட்பட அனைத்திலும் தற்போது இருக்கும் நிலையே தொடரும். பின்னர் வழக்கை பட்டியலிட்டு விசாரித்து முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.