சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாமக தொடங்கியதில் இருந்து சமூக நீதிக்காகவும் அனைத்து தரப்பு மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வேண்டியும் பல போராட்டங்களை நடத்தி அதில் பல சமூக மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடும், உள் ஒதுக்கிடையும் பெற்றுத் தந்ததில் நமது பங்களிப்பு மிகப்பெரிய பங்களிப்பாகும். பெரும்பான்மையான சமூகமாக உள்ள நமது வன்னிய சமூகத்திற்கு என்று தனி உள் ஒதுக்கீடு கேட்டு பல ஆண்டு காலமாக நாம் கோரிக்கைகளை வைத்து போராடி வந்தோம்.
இந்தநிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நான் நேரில் சந்தித்தும், பலமுறை கடிதங்கள் மற்றும் அறிக்கைகள் வாயிலாகவும் சாதிவாரி கணக்கீட்டை விரைவாக நடத்தி மக்கள் தொகை அடிப்படையில், வன்னியர்களுக்கு இடப் பங்கீட்டை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். 10.5 விழுக்காடு தனி ஒதுக்கீட்டை உடனே பெறுகின்ற வகையில் கோரிக்கை, போராட்டங்கள் நடத்தி உள்ளோம். நமது கோரிக்கைகளை கவனமுடன் பரிசீலித்து, உரிய நடவடிக்கைகளை எடுத்து, வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அப்படி வழங்காத பட்சத்தில், வரும் டிசம்பர் 5ம்தேதி காலை முதல் மாலை வரை, தமிழகத்தினுடைய அனைத்து மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பாக அறவழியிலான தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.