வாணியம்பாடி: வாணியம்பாடியில் இன்று அதிகாலை மரகுடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் சம்பத்(45). இவர் வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் ஆலங்காயம்-வாணியம்பாடி சாலையில் மர குடோன் வைத்துள்ளார். இங்கு வீடுகளுக்கு தேவைப்படும் கதவு, ஜன்னல், கட்டில்,சோபா உள்ளிட்ட பொருட்களை செய்வதற்கு தேவையான தேக்கு, வேங்கை உள்ளிட்ட விலையுயர்ந்த மரங்களையும், கதவு, ஜன்னல் போன்றவற்றையும் சேமித்து வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள், வாணியம்பாடி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் மர குடோனில் இருந்த மரங்கள், பொருட்கள், இயந்திரங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இவற்றின் மதிப்பு ரூ. பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.